வரி கட்ட வேண்டாம்! ஆனால் வெளிநாட்டுப் பயணம், சொகுசுப் பொருட்கள் வாங்கினால் ஐடிஆர் கட்டாயம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பல வரி செலுத்துவோர் தங்களின் ஆண்டு வருமானம் வருமான வரி விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை விலக்கு வரம்பான ₹2.5 லட்சம் அல்லது ₹3 லட்சத்திற்குள் இருந்தால், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தேவையில்லை என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர். ஆனால், தற்போதைய நவீன வருமான வரி விதிகளின்படி, உங்களின் வருவாயை மட்டும் வைத்து ஐடிஆர் தாக்கல் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உங்களின் அதிக மதிப்புள்ள செலவினங்களையும் சேர்த்தே வருமான வரித்துறை கண்காணிக்கிறது. நீங்கள் செய்யும் வெளிநாட்டுப் பயணம் அல்லது ஆடம்பரச் செலவுகள் உங்களை ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய சட்டபூர்வக் கடமைக்குள் கொண்டு வந்து விடுகின்றன.
வெளிநாட்டுச் செலவு
வெளிநாட்டுப் பயணங்களுக்கு ₹2 லட்சம் மேல் செலவு செய்தால் ஐடிஆர் கட்டாயம்
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 139(1) இன் ஏழாவது விதியின்படி, ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் வரி விலக்கு வரம்பிற்குள் இருந்தாலும், அவர் ஒரு நிதியாண்டில் தனக்காகவோ அல்லது வேறு எந்தவொரு நபருக்காகவோ வெளிநாட்டுப் பயணத்திற்காக ₹2 லட்சத்திற்கும் அதிகமாக செலவழித்திருந்தால், அவர் கண்டிப்பாக ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு நிதியாண்டில் நீங்கள் மேற்கொண்ட பல வெளிநாட்டுப் பயணங்களின் ஒட்டுமொத்த விமானக் கட்டணம், விசா மற்றும் தங்குமிடம் ஆகிய அனைத்தின் கூட்டுத்தொகையும் இதில் அடங்கும். உங்கள் பெற்றோர் அல்லது பிள்ளைகளின் வெளிநாட்டுப் பயணத்திற்காக உங்கள் கணக்கில் இருந்து ₹2 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருந்தாலும், நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்தாக வேண்டும்.
அந்நியச் செலாவணி
சொகுசுப் பொருட்கள் மற்றும் அந்நியச் செலாவணி மீதான டிசிஎஸ்
உங்களின் செலவினங்கள் ₹2 லட்சம் வரம்பிற்குள் வராவிட்டாலும், நீங்கள் செய்யும் சில பிரீமியம் ஆடம்பரச் செலவுகள் உங்களின் பான் கார்டு மூலமாக வரி வசூல் (TCS) தடம் ஒன்றை உருவாக்கி விடுகின்றன. கடந்த 22 ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ள விதிகளின் படி, ₹10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள சொகுசுப் பொருட்களான கைக்கடிகாரங்கள், கலைப் பொருட்கள், பிராண்டட் கைப்பைகள், காலணிகள் மற்றும் ஹோம் தியேட்டர் போன்றவற்றை வாங்கும்போது விற்பனையாளர்கள் 1% டிசிஎஸ் வரியை உங்களின் பான் கார்டில் இருந்து வசூலிப்பார்கள். மேலும், வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு ₹10 லட்சம் வரை 5 சதவீதமும், அதற்கு மேல் 20 சதவீதமும் டிசிஎஸ் வசூலிக்கப்படுகிறது.
சட்ட சிக்கல்
ஐடிஆர் தாக்கல் செய்யாவிடில் ஏற்படும் இழப்புகளும் சட்ட சிக்கல்களும்
உங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் டிசிஎஸ் என்பது கூடுதல் வரி அல்ல. அது உங்களின் பான் கார்டில் முடங்கியிருக்கும் உங்களின் சொந்த அட்வான்ஸ் வரிப் பணமாகும். அரசாங்கத்திடம் முடங்கிக் கிடக்கும் இந்த பணத்தைத் திரும்பப் பெறவோ அல்லது வரிப் பொறுப்பிற்கு எதிராகச் சரிசெய்யவோ இருக்கும் ஒரே வழி ஐடிஆர் தாக்கல் செய்வது மட்டும்தான். நீங்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாவிடில், அந்த டிசிஎஸ் கிரெடிட் தொகையை நீங்கள் நிரந்தரமாக இழக்க நேரிடும். மேலும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையும் உங்களின் வருடாந்திர தகவல் அறிக்கையில் (AIS) மற்றும் படிவம் 26AS இல் துல்லியமாகப் பதிவாகிவிடும் என்பதால், ஐடிஆர் தாக்கல் செய்யாமல் இருந்தால் நோட்டீஸ் வர வாய்ப்புகள் மிக அதிகம்.