LOADING...
ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு! கிரிப்டோவில் சம்பளம் வாங்கி கணக்கு காட்டலையா? 44,000 பேரை தூக்கிய வருமான வரித்துறையின் ஏஐ
கிரிப்டோவில் சம்பளம் வாங்கி கணக்கு காட்டாத 44,000 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு! கிரிப்டோவில் சம்பளம் வாங்கி கணக்கு காட்டலையா? 44,000 பேரை தூக்கிய வருமான வரித்துறையின் ஏஐ

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2026
07:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பம், தணிக்கை, கல்வி மற்றும் ஆலோசனைத் துறைகளை சேர்ந்த பல வல்லுநர்கள், தங்களின் வழக்கமான முதன்மைப் பணியுடன் சேர்த்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ரகசியமாகப் பகுதிநேர வேலைகளை (Moonlighting) செய்து வந்துள்ளனர். இவ்வாறு ஈட்டிய கூடுதல் வருவாயை இந்திய அரசாங்கத்திற்குத் தெரியாமல் மறைப்பதற்காக, அவர்கள் தங்களின் சம்பளத்தை அமெரிக்க டாலராகப் பெறாமல், ஸ்டேபிள்காயின்கள் அல்லது பிற கிரிப்டோ கரன்சிகளாகப் பெற்று வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இத்தகைய அதிநவீன டிஜிட்டல் வரி ஏய்ப்புகளைக் கண்டறியும் பொருட்டு, இந்திய வருமான வரித்துறை தற்பொழுது நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது.

நோட்டீஸ்

44,000 க்கும் மேற்பட்டோருக்கு வருமான வரி நோட்டீஸ்

மத்திய நேரடி வரிகள் வாரியம் அண்மையில் நடத்திய பிரம்மாண்ட தரவு பகுப்பாய்வு சோதனையின் மூலம், கிரிப்டோ பரிவர்த்தனைகளை மறைத்த சுமார் 44,000 க்கும் மேற்பட்ட வரி செலுத்துவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு அதிரடி நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இந்த ரகசிய விசாரணைகளின் மூலம் இதுவரை கணக்கில் காட்டப்படாத கிட்டத்தட்ட ₹888.82 கோடி மதிப்பிலான கிரிப்டோ வருமானம் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் புதிய 2026 ஆம் ஆண்டு வரி விதிப்பு விதிகளின்படி, உள்நாட்டு எக்ஸ்சேஞ்ச்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியப் பயனர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கிரிப்டோ பரிவர்த்தனை விவரங்களும் நேரடியாக வருமான வரித்துறையின் ஏஐ கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிளாக்செயின் கண்காணிப்பு

பன்னாட்டுத் தரவு பகிர்வு மற்றும் பிளாக்செயின் கண்காணிப்பு கருவிகள்

முன்பெல்லாம் வெளிநாட்டு வாலட்டுகளில் கிரிப்டோவை சேமித்து வைத்தால் இந்திய அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், தற்பொழுது இந்தியாவின் புதிய வருமான வரிச் சட்டம், 2025 இன் பிரிவு 509 இன் படியும், சர்வதேச ஓஇசிடி கிரிப்டோ சொத்து அறிக்கை கட்டமைப்பின் படியும், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் தங்களின் பயனர் விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து வருகின்றன. மேலும், வருமான வரித்துறை தற்பொழுது பயன்படுத்தி வரும் அதிநவீன பிளாக்செயின் அனலிட்டிக்ஸ் கருவிகள், டிஜிட்டல் நாணயங்கள் எப்போது, எங்கு, எந்த உள்ளூர் கரன்சியாக மாற்றப்பட்டன என்பதை மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுகின்றன.

Advertisement

முதலீடுகள்

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொகுசு கிரிப்டோ முதலீடுகள்

வருமான வரித்துறையின் விசாரணையில் பல ஐடி ஊழியர்கள் தங்களின் கிரிப்டோ வருவாயை இந்தியாவிற்குள் கொண்டு வராமல், வரி ஏய்ப்பு சொர்க்கங்களாகக் கருதப்படும் குறைந்த வரி விதிப்பு கொண்ட வெளிநாட்டு அதிகார வரம்புகளில் உள்ள டிஜிட்டல் வாலட்டுகளில் முடக்கி வைத்துள்ளனர். சில இந்திய ஊழியர்கள் தங்களின் வெளிநாட்டுத் தரகு கணக்குகள் மூலமாக சர்வதேச கிரிப்டோ இடிஎஃப்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைத்த லாபத்தையும் தங்களின் வருடாந்திர ஐடிஆர் தாக்கலில் காட்டாமல் ஏமாற்றியுள்ளனர். இந்த வெளிநாட்டு சொத்து விவரங்கள் அனைத்தும் தற்பொழுது அரசின் வருடாந்திர தகவல் அறிக்கையில் துல்லியமாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன.

Advertisement

கருப்புப் பணம்

30% கிரிப்டோ வரியுடன் பாயும் கடுமையான கருப்புப் பணச் சட்டம்

இந்திய வரிச் சட்டங்களின்படி, ஒரு இந்தியக் குடிமகன் உலகில் எந்த மூலையில் இருந்து வருமானம் ஈட்டினாலும், அதற்கு இந்தியாவில் முறைப்படி வரி செலுத்தியாக வேண்டும். குறிப்பாக, கடந்த 2022 முதல் அமலில் உள்ள விதிகளின்படி, கிரிப்டோ மற்றும் விடிஏ பரிமாற்றங்கள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு எவ்வித வணிகச் செலவுக் கழிவுகளும் இன்றி நேரடியாக 30 சதவீத நிலையான வரியும், 1% டிடிஎஸ் வரியும் விதிக்கப்படுகிறது. தற்பொழுது இந்த வெளிநாட்டு கிரிப்டோ வருமானத்தை மறைத்தவர்களுக்கு 30% வரியுடன் சேர்த்து 50% முதல் 200% வரை கடுமையான அபராதம் விதிக்கப்படவுள்ளது. மேலும், வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததற்காகக் கடுமையான கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழும், வரி ஏய்ப்பிற்காக சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டப்படியான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Advertisement