இந்தியாவின் கடன் சுமை குறித்த IMF-ன் கணிப்பு, ஏற்காத இந்திய அரசு
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகிகள் இணைந்து இந்தியாவின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் நிதிநிலை குறித்து ஆய்வு செய்யும் 'Article IV Consultation' கூட்டத்தை நிறைவு செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் குறித்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது சர்வதேச நாணய நிதியம். அந்த அறிக்கையில் இந்தியாவின் சர்வதேச பொதுக்கடனானது நடுத்தர கால அளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (100% GDP) கடக்கும் அபாயம் உள்ளதாகத் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2020ம் ஆண்டு 75 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பொதுக்கடன் அளவு, 2023-24ம் நிதியாண்டில் 82 சதவிகிதமாக உயரலாம் எனக் கணித்திருக்கிறது சர்வதேச நாணய நிதியம்.
ஆபத்தான நிலையில் இந்தியாவின் கடன்?
இந்தியாவின் நீண்டகால கடன் நிலைத்தன்மையிலும் சில பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் கணித்திருக்கிறது சர்வதேச நாணய நிதியம். இதுவும் அந்த உலகளாவிய நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைய அதிகப்படியான முதலீடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருப்பதன் காரணமாக இந்த நிலை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது சர்வதேச நாணய நிதியம். ஆனால், அந்த நிதி அமைப்பின் இந்தக் கணிப்பை ஏற்காத இந்திய அரசு, கடன் சுமையால் ஏற்படும் அபாயம் இந்தக் கணிப்பை விடக் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.