IBM பங்குகள் 25% வீழ்ச்சி: 60 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் சரிவுக்கான 5 முக்கிய காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
உலக புகழ்பெற்ற பழைமையான தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-இன் பங்குகள், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் 25%-க்கும் மேல் சரிவடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத இந்த மிக மோசமான வீழ்ச்சியால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.5.8 லட்சம் கோடி) ஒரே நாளில் துடைத்தெறியப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டின் வரலாற்றுப் புகழ்பெற்ற "பிளாக் மண்டே" சந்தை வீழ்ச்சியை விடவும் இது மோசமானதாகக் கருதப்படுகிறது. இந்த இமாலயச் சரிவுக்கான பின்னணி காரணங்கள் இதோ:
#1
தடம் மாறிய நிறுவனங்களின் பட்ஜெட்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் சாப்ட்வேர் பட்ஜெட்டுகளை குறைத்துக்கொண்டு, ஐடி கட்டமைப்பு வசதிகளான சர்வர்கள், ஸ்டோரேஜ் அமைப்புகள் மற்றும் மெமரி சிப்புகளை வாங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த வேகமான பட்ஜெட் மாற்றத்தை ஐபிஎம் நிறுவனம் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா ஒப்புக்கொண்டுள்ளார்.
#2
ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் ஏற்பட்ட தொய்வு
பட்ஜெட் மாற்றங்களுக்கு ஏற்ப ஐபிஎம் நிறுவனத்தின் விற்பனைக் குழுவினர் விரைந்து செயல்படத் தவறியதால், நிறுவனத்தின் பல முக்கியப் பெரிய ஒப்பந்தங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் இறுதி செய்யப்படாமல் கைவிடப்பட்டன.
இது நிறுவனத்தின் வருவாய் இழப்பிற்கு நேரடி காரணமாக அமைந்தது.
#3
சைபர் செக்யூரிட்டிக்கு மாறிய முன்னுரிமை
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'மைதோஸ் ஏஐ' போன்ற மேம்பட்ட ஏஐ மாடல்கள், தற்போதுள்ள மென்பொருள்களின் குறியீட்டு பிழைகளை கண்டறியும் திறன் பெற்றுள்ளன.
இதனால், ஏஐ மூலமான சைபர் தாக்குதல்களுக்குப் பயந்து, நிறுவனங்கள் புதிய சாப்ட்வேர் வாங்குவதை ஒத்திவைத்துவிட்டு, தங்களின் சைபர் பாதுகாப்பை பலப்படுத்துவதில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
#4
மெயின்பிரேம் மற்றும் பரிவர்த்தனை மென்பொருள் மந்தநிலை
வங்கி, விமான போக்குவரத்து மற்றும் அரசுத் துறைகள் பயன்படுத்தும் ஐபிஎம்-இன் பிரதான வணிகமான மெயின்பிரேம் (z17 Mainframe) பிரிவின் வருவாயும், அதன் பரிவர்த்தனை செயலாக்க மென்பொருள் விற்பனையும் எதிர்பார்த்ததை விட கடுமையான மந்தநிலையை சந்தித்துள்ளன.
இருப்பினும், ரெட் ஹாட் நிறுவனத்தின் 11% வளர்ச்சி மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் மேற்கொள்ளப்படும் 10 பில்லியன் டாலர் முதலீடுகள் தங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் கை கொடுக்கும் என்று ஐபிஎம் நம்புகிறது.
வரும் ஜூலை 22 அன்று ஐபிஎம் தனது முழுமையான காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இந்த தற்காலிக சரிவிலிருந்து நிறுவனம் மீளுமா என்பதை உற்றுநோக்கி வருகின்றனர்.