2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அதன் இறுதி நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அதிக அளவிலான விண்ணப்பங்களை பெற்றது. இதன் மூலம், 2.37 மடங்கு சந்தா விகிதத்துடன் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பங்கள் நிறைவடைந்தன. ஐபிஓ மெதுவாகத் தொடங்கினாலும், பின்னர் தேவை அதிகரித்தது. முதன்மையாக தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களால் (QIBs) ஐபிஓ விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் 6.97 மடங்கு சந்தா விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, சில்லறை மற்றும் நிறுவன சாராத முதலீட்டாளர் பிரிவுகள் முறையே 0.50 மடங்கு மற்றும் 0.60 மடங்கு சந்தாக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.
சில்லறை முதலீட்டாளர்களின் தயக்கத்தின் பின்னணி
முதலீட்டாளர்களின் தயக்கம், ஹூண்டாயின் மதிப்பீடுகள், தேங்கி நிற்கும் சாம்பல் சந்தை பிரீமியம் மற்றும் சாத்தியமான வளர்ச்சி சவால்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஈக்வென்டிஸின் தலைமை முதலீட்டு அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங் அரோரா, இது குறித்து கூறுகையில், வளர்ந்து வரும் மின்சார வாகனம், ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி பிரிவுகளில் ஹூண்டாய் வரையறுக்கப்பட்ட இருப்பை கொண்டுள்ளதை எடுத்துக் காட்டினார். இது அதன் போர்ட்ஃபோலியோவில் வெறும் 11% மட்டுமேயாகும். ஹூண்டாய் நிறுவனத்தின் ஐபிஓவுக்கான சாம்பல் சந்தை பிரீமியம் (GMP) ரூ.0 ஆக இருந்தது. இதன்பொருள் விரைவான லாபத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு உடனடி லாபம் கிடைக்காது. பங்குகளின் ஒதுக்கீடு அக்டோபர் 18, 2024 அன்று இறுதி செய்யப்படும். பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவற்றில் அக்டோபர் 22, 2024 அன்று பட்டியலிடப்படும்.