சாமானியர்களுக்கு அதிர்ச்சி: சோப்பு, ஷாம்பு விலை உயர்வு, அளவைக் குறைக்கும் இந்துஸ்தான் யூனிலீவர்
செய்தி முன்னோட்டம்
இன்று தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் (HUL), மூலப்பொருட்களின் விலை உயர்வால் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக சோப்பு, ஷாம்பு மற்றும் டிடர்ஜென்ட் போன்ற தினசரி தேவைகளுக்கான பொருட்களின் விலை உயரவுள்ளது அல்லது அவற்றின் அளவு குறைக்கப்படவுள்ளது. மேற்கு ஆசியாவில் (ஈரான்-அமெரிக்கா) நிலவும் போர்ச் சூழல் காரணமாகக் கச்சா எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்களின் விலை 8-10% அதிகரித்துள்ளது.
காரணம்
விலை உயர்வு மற்றும் 'ஷ்ரின்க்ஃபிளேஷன்'
இதனைச் சமாளிக்க HUL நிறுவனம் இரண்டு விதமான உத்திகளைக் கையாண்டு வருகிறது. சிறிய பாக்கெட்டுகள்: குறைந்த விலையுள்ள (₹1, ₹5, ₹10) சேஷே பாக்கெட்டுகளின் எடை/அளவு குறைக்கப்படுகிறது. அதாவது, நீங்கள் அதே விலையைக் கொடுத்தாலும், முன்னைவிடக் குறைவான அளவே பொருள் கிடைக்கும். பெரிய பேக்குகள்: அதிக எடையுள்ள பாக்கெட்டுகளின் விலை 2% முதல் 5% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
எந்தப் பொருட்களின் விலை அதிகம் பாதிக்கும்?
நிறுவனத்தின் நிதி அதிகாரி (CFO) நிரஞ்சன் குப்தா தெரிவித்துள்ளபடி, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பின்வரும் பொருட்கள் நேரடியாகப் பாதிக்கப்படும்: துணி துவைக்கும் பவுடர் மற்றும் சோப்புகள் (Detergents) அதிக விலை உயர்வைச் சந்திக்கும். குளியல் சோப்புகள், ஷாம்பு மற்றும் ஃபேஸ் வாஷ் போன்றவற்றின் விலையும் உயரும். தேயிலை போன்ற பொருட்களின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது, சில இடங்களில் விலை குறையவும் வாய்ப்புள்ளது. HUL நிறுவனத்தின் CEO கூறுகையில், "மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழலை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். லாபத்தை விட விற்பனை அளவை (Volume growth) அதிகரிப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறோம். செலவுகளைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விளம்பரச் செலவுகளைத் திட்டமிடுகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.