
H-1B விசா லாட்டரி முறையில் மாற்றங்கள் அமலானால் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் பெரிதும் பயன்படுத்தும் H-1B விசா லாட்டரி முறையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது, அமெரிக்கா நிறுவனம் ஒவ்வொரு H-1B விசாவுக்கும் ஆண்டுக்கு USD100,000 கட்டணம் கட்டவேண்டும் என விதிக்கப்பட்டதையடுத்து வந்த தீர்மானமாகும். பரிந்துரைக்கப்பட்ட இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:
#1
லாட்டரி முறை மாற்றம்
தற்போதைய சீரற்ற (random) H-1B லாட்டரி முறையை மாற்றி, ஊதிய அடிப்படையிலான தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான திட்டம். அதன்படி, அதிக ஊதியம் தரும் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இது, அமெரிக்க தொழிலாளர்கள் மீது வெளிநாட்டு தொழிலாளர்களால் ஏற்படும் ஊதிய போட்டியை தவிர்க்க எடுத்த நடவடிக்கையாக DHS (Department of Homeland Security) தெரிவித்துள்ளது.
#2
ஊதிய நிலைகளின் அடிப்படையில் வாய்ப்பு
தொழிலாளர் துறை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, விண்ணப்பதாரர்கள் நான்கு ஊதிய நிலைகளாக பிரிக்கப்படுவர். உயர் நிலை ஊதியக்கூலி பெறுவோருக்கு 4 முறை லாட்டரியில் வாய்ப்பு, குறைந்த நிலை ஊதியக்கூலி பெறுவோருக்கு 1 முறை மட்டுமே வாய்ப்பு.
#3
$100,000 விசா கட்டணம்
H-1B விசாவுக்கான ஆண்டுதோறும் கட்டணம் $100,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது, தற்போதுள்ள H-1B வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது, ஆனால் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். Amazon, Meta போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அமெரிக்காவில் தங்கியிருக்க வலியுறுத்தியுள்ளன.
தாக்கம்
இந்தியர்களுக்கான தாக்கம்
H-1B விசாவின் மிகப்பெரிய பயனாளியாக இந்தியா உள்ளதால், இந்த மாற்றங்கள் இந்திய தொழிலாளர்களை அதிகமாக பாதிக்கக் கூடும். 2024-ல் வழங்கப்பட்ட 399,395 விசாக்களில் 71% இந்தியர்களுக்கே வழங்கப்பட்டது, சீனா 11.7% மட்டுமே பெற்றது. புதிய தேர்வு முறைகள் மற்றும் உயர்ந்த கட்டணம் காரணமாக, தொடக்க நிலை திறமையாளர்கள், குறிப்பாக இந்தியர்கள், சந்திக்க வேண்டிய சவால்கள் அதிகமாக இருக்கலாம். பலரும் இந்த மாற்றங்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதெனக் கருதுகின்றனர். "இந்த திட்டம், திறமையான இடம்பெயர்ந்தோரின் வாய்ப்புகளை குறைக்கும்" என பல குடியேற்ற வழக்கறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.