LOADING...
ஜிஎஸ்டி 2.0: வரிவிலக்கு பெற்ற பொருட்களின் முழுமையான பட்டியல்
ஜிஎஸ்டி 2 அடுக்கு வரைமுறையை வரிவிலக்கு பெற்ற பொருட்களின் முழுமையான பட்டியல்

ஜிஎஸ்டி 2.0: வரிவிலக்கு பெற்ற பொருட்களின் முழுமையான பட்டியல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2025
08:04 am

செய்தி முன்னோட்டம்

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில், ஒரு முக்கிய வரி சீரமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி புதிய இரு அடுக்கு வரி அமைப்பான 5% மற்றும் 18% ஆகியவை செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். இதுகுறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 56 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தார். இந்த நடவடிக்கை வரி அமைப்பை எளிதாக்குவதோடு, நுகர்வோரின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வரி குறைப்பு

அன்றாடப் பொருட்களுக்கு வரி குறைப்பு

புதிய கொள்கையின் மிக முக்கியமான அம்சம், தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படுவதுதான். ஹேர் ஆயில், கார்ன்ஃப்ளேக்ஸ், தொலைக்காட்சிகள் மற்றும் இதர வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட அனைத்து தனிநபர் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, உள்நாட்டுச் செலவினங்களை ஊக்குவித்து, இந்தியப் பொருளாதாரத்தின் மீதான அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் போன்ற பொருட்களுக்கு மட்டுமே வரி குறைப்பு இல்லை.

காப்பீடு

காப்பீட்டுக்கான வரி விலக்கு

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். தனிநபர் ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 18% ஜிஎஸ்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு, அனைத்து வகையான ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த நடவடிக்கை, காப்பீட்டுச் சேவைகளை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்து, அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். நவரத்திரி பண்டிகையிலிருந்து இந்த மாற்றங்கள் அமலுக்கு வருவதால், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இது நிதிச் சலுகையை அளிக்கும். இது தவிர வரி விலக்கு பெற்ற பொருட்களின் முழுமையான பட்டியல் பின்வருமாறு:-

விவசாயம்

உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் 

தானியங்கள்: கோதுமை, அரிசி மற்றும் பதப்படுத்தப்படாத பிற தானியங்கள் பதப்படுத்தப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள் வேர் காய்கறிகள்: உருளைக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள், வெட்டப்படாத / பதப்படுத்தப்படாதவை பதப்படுத்தப்படாத மீன் மற்றும் இறைச்சி (பேக்கேஜ் செய்யப்படாதது) இளநீர், வெல்லம், அப்பளம், மாவு, தயிர், லஸ்ஸி, மோர், பால், நீர்வாழ் உயிரினங்களுக்கான தீவனங்கள் பதப்படுத்தப்படாத தேயிலை மற்றும் காபி கொட்டைகள் நடவு செய்வதற்கான விதைகள் அடிப்படை கை கருவிகள்: மண்வெட்டி மற்றும் கடப்பாரை விவசாயக் கருவிகள்

ஜவுளி

ஜவுளித்துறைக்கான மூலப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய துணிவகைகள்

கச்சா பட்டு, பட்டு கழிவுகள் பதப்படுத்தப்படாத கம்பளி கதர் துணி, கதர் நூல், கச்சா சணல் இழை விறகு, கரி கைத்தறி துணிகள்

அத்தியாவசியப் பொருட்கள்

பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள்

புத்தகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புவியியல் வரைபடங்கள், அச்சிடப்பட்ட பொருட்கள் முத்திரை காகிதங்கள் (non-judicial stamp paper), அஞ்சல் பொருட்கள் உயிருள்ள விலங்குகள் (குதிரைகள் தவிர), தேனீ பெட்டிகள், மனித இரத்தம், விந்து, கருத்தடை சாதனங்கள் கண்ணாடி வளையல்கள், சாக்பீஸ் மத சம்பந்தப்பட்ட பொருட்கள் (உதாரணமாக, சிலைகள், பொட்டு, குங்குமம்), களிமண் மற்றும் மட்பாண்டப் பொருட்கள் காற்றாடிகள், இயற்கை உரம் காது கேட்கும் கருவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிற துணை சாதனங்கள்