
ஜிஎஸ்டி 2.0 இன்று முதல் அமல்: அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைகிறது, ஆடம்பரப் பொருட்கள் விலை அதிகரிக்கிறது!
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் வரி சீர்திருத்தமான 'ஜிஎஸ்டி 2.0' இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி "பச்சத் உத்சவ்" அல்லது "சேமிப்புத் திருவிழா" என இந்த சீர்திருத்தத்தை வர்ணித்துள்ளார். புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பானது, தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் விலையைக் குறைத்து, நுகர்வோருக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விகிதங்கள்
புதிய வரி விகிதங்கள் என்ன?
முன்னர் இருந்த 5%, 12%, 18%, மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு வரி அமைப்பு, தற்போது இரண்டு முக்கிய வரி அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது: 5% வரி: உணவு தானியங்கள், மருந்துகள், அடிப்படை பால் பொருட்கள், கல்வி சார்ந்த பொருட்கள், சப்பாத்தி, பரோட்டா, பிஸ்கட், சாக்லேட், நட்ஸ் போன்ற அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பொருட்களுக்கு 5% வரி விதிக்கப்படும். 18% வரி: உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பெரும்பாலான நுகர்வோர் சேவைகளுக்கு 18% வரி விதிக்கப்படும். 40% வரி: புகையிலை, பான் மசாலா, aerated பானங்கள், பிரீமியம் வாகனங்கள், சூதாட்டம், கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் ரேஸ் கிளப் போன்ற ஆடம்பர மற்றும் sin பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும்.
குறையும் விலை
எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?
உணவுப் பொருட்கள்: வெண்ணெய், நெய், பனீர், சீஸ், பாஸ்தா, பிஸ்கட், சாக்லேட், நம்கீன்ஸ், பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் சர்க்கரை பொருட்களின் விலை குறையும். சுகாதாரம் & நுகர்வோர் பொருட்கள்: உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள், புத்தகங்கள், வாஷிங் மெஷின், டிஷ்வாஷர், தொலைக்காட்சிகள், ஹேர் ஆயில், ஷாம்பூ மற்றும் பற்பசைகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. வாகனங்கள்: 350சிசி வரை எஞ்சின் கொண்ட சிறிய கார்கள் மற்றும் பைக்குகளின் விலை குறையும். சேவைகள்: ரூ.7,500க்கு கீழ் உள்ள ஹோட்டல் அறைக் கட்டணங்கள் மற்றும் சிக்கன விமான டிக்கெட்டுகளுக்கு 5% மட்டுமே வரி விதிக்கப்படும்.
விலை உயர்வு
விலை அதிகரிக்கும் பொருட்கள் எவை?
ஆடம்பரப் பொருட்கள்:சிகரெட், குட்கா, பான் மசாலா மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட காற்றூட்டப்பட்ட நீர் ஆகியவற்றின் விலை 40% வரி காரணமாக அதிகரிக்கும். வாகனங்கள்: 350சிசிக்கு மேல் உள்ள பைக்குகள் மற்றும் சொகுசு கார்கள் 40% வரியின் கீழ் வரும். பிற பொருட்கள்/சேவைகள்:நிலக்கரி, கேசினோ, குதிரைப் பந்தயம், லாட்டரி மற்றும் ஐபிஎல் டிக்கெட்டுகள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். இந்த வரி மாற்றங்களால் பல முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. இருப்பினும், கடந்த கால அனுபவத்தின்படி, வரி குறைப்பின் முழுப் பலனும் நுகர்வோரை சென்றடையவில்லை என ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. எனவே, வரிச் சலுகைகள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய அரசாங்கம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.