காப்பீட்டுத் துறையில் இனி 100% வெளிநாட்டு முதலீடு! எல்ஐசிக்கு மட்டும் தனி கட்டுப்பாடு; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
இந்தியக் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை 'தானியங்கி வழிமுறை' மூலம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அரசு சனிக்கிழமை (மே 2) வெளியிட்டது. இந்த மாற்றத்தின் மூலம் சர்வதேச அளவிலான முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளைத் தொடங்கவும், உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் கூடுதல் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
புதிய கட்டுப்பாடுகள்
காப்பீட்டு நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்
இந்த அறிவிப்பின்படி, 100 சதவீத முதலீடு அனுமதிக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்தியக் காப்பீட்டுச் சட்டம் 1938ன் கீழ் முறையான உரிமத்தைப் பெற வேண்டும். மேலும், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெறுவது அவசியமாகும். முக்கியமான விதியாக, வெளிநாட்டு முதலீடு பெறும் இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில், அதன் தலைவர், நிர்வாக இயக்குநர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோரில் ஒருவர் கண்டிப்பாக இந்தியக் குடியுரிமை பெற்ற குடிமகனாக இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.
எல்ஐசி
எல்ஐசி நிறுவனத்திற்கான தனித்துவமான விதிகள்
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசிக்கு மட்டும் இந்த முதலீட்டு வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்ஐசி சட்டத்தின்படி, அந்நிய நேரடி முதலீடு என்பது 20 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும். இதுவும் தானியங்கி வழிமுறை மூலமே செயல்படுத்தப்படும். எல்ஐசியின் பங்குகளைப் பொறுத்தவரை, அது எல்ஐசி சட்டம் 1956 மற்றும் காப்பீட்டுச் சட்டம் 1938ன் கீழ் உள்ள பிரிவுகளுக்கு உட்பட்டே நிர்வகிக்கப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இடைத்தரகர்கள்
காப்பீட்டு இடைத்தரகர்களுக்கான 100% முதலீடு
காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமன்றி, அதனுடன் தொடர்புடைய காப்பீட்டுத் தரகர்கள், மறு காப்பீட்டுத் தரகர்கள், காப்பீட்டு ஆலோசகர்கள் மற்றும் கார்ப்பரேட் ஏஜெண்டுகள் ஆகியோருக்கும் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மூன்றாம் தரப்பு நிர்வாகிகள், சர்வேயர்கள் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளர்கள் ஆகியோரும் இந்தச் சலுகையைப் பெற முடியும். இவர்களுக்கான விதிமுறைகளை காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அவ்வப்போது அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை நாடுகள்
2025 சட்டத் திருத்தமும் எல்லை நாடுகளுக்கான விதிகளும்
டிசம்பர் 2025ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'சப்கா பீமா சப்கா ரக்ஷா' (திருத்தப்பட்ட காப்பீட்டுச் சட்டம்) மசோதாவின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கான முதலீட்டு விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய நாடுகளில் இருந்து வரும் 10 சதவீதத்திற்கும் குறைவான முதலீடுகள் அரசின் முன்கூட்டிய அனுமதி இன்றி தானியங்கி வழிமுறையிலேயே அனுமதிக்கப்படும் என அமைச்சரவை ஏற்கனவே திருத்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.