LOADING...
வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு!
வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 25, 2026
08:24 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு-பெருந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நுகர்வோருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து துறைசார் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தற்பொழுது முழுமையாக நீக்கியுள்ளது. இதன் மூலம், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வந்த போர் நெருக்கடிக்கு முன்பாக எந்த அளவில் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டதோ, அதே அளவிற்குத் தற்பொழுது தடையற்ற விநியோகத்தை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

கூடுதல் தளர்வு

மொத்த விநியோகத்தில் 50% கூடுதல் தளர்வு அறிவிப்பு

மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வியாழக்கிழமையன்று (ஜூன் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் நெருக்கடி தொடங்கிய சமயத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த எல்பிஜி விநியோகமானது, தற்பொழுது போர் காலத்திற்கு முந்தைய நுகர்வு அளவில் 50 சதவீதம் வரை தளர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை நிலவரம் கணிசமாக மேம்பட்டுள்ளதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி

C3-C4 மூலக்கூறுகள் திசைதிருப்பப்பட்டதன் பின்னணி

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர்ச் சூழலின் போது, இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒரு அவசர உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இதன்படி, பெட்ரோகெமிக்கல் மற்றும் பிற கீழ்நிலைத் தொழிற்துறை பயன்பாட்டிற்கு செல்ல வேண்டிய C3 (புரோப்பேன்) மற்றும் C4 (பியூட்டேன்) ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளை, முழுமையாக உள்நாட்டு எல்பிஜி எரிவாயு தயாரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு கட்டாயமாக்கியது. இதனால் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் விநியோகத்தில் கடுமையான பற்றாக்குறையும் கட்டுப்பாடுகளும் நிலவி வந்தன.

Advertisement

தொழில்துறை

தொழில்துறையினருக்கு நிம்மதி

தற்பொழுது உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி சரக்குக் கப்பல்களின் வரத்து சீராக இருப்பதாலும், C3-C4 மூலக்கூறுகளை எல்பிஜி தயாரிப்பிற்குத் திசைதிருப்புவதை அரசு தற்பொழுது குறைத்துக் கொண்டுள்ளது. இதனால் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுக்குக் கூடுதல் மூலப்பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியானது நாளொன்றுக்கு 40 டிஎம்டி என்ற குறைந்தபட்ச அளவுக்குக் குறையாமல் பராமரிக்கப்படும் என்றும், இதனால் பொதுமக்களின் வீட்டு சமையல் எரிவாயு விநியோகத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்றும் பெட்ரோலிய அமைச்சகம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement