கூகுள் பே மூலம் பில் செலுத்துபவர்களுக்கு சேவைக் கட்டணம் விதிப்பு; கிரெடிட்/டெபிட் கார்டு பயனர்களுக்கு மட்டும்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் யுபிஐ சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள கூகுள் பே, பில் செலுத்துவதற்கு சேவைக் கட்டணத்தை விதிக்கத் தொடங்கியுள்ளது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது. கட்டணங்கள் பரிவர்த்தனை மதிப்பில் 0.5% முதல் 1% வரை இருக்கும்.
மேலும், இதற்கு ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கூகுள் பேவில் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டண விவரங்கள்
பில் செலுத்துவதற்கான சேவைக் கட்டணம்
கூகுள் பே அறிமுகப்படுத்திய சேவைக் கட்டணம் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு பில்கள் போன்ற பல பில் செலுத்துதல்களுக்குப் பொருந்தும்.
இது தொடர்பாக எகனாமிக் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், கிரெடிட் கார்டு மூலம் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு ஒரு வாடிக்கையாளரிடம் சேவைக் கட்டணமாக சுமார் ₹15 வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜிஎஸ்டி உட்பட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றம்
கூகுள் பே மாற்றத்தின் பின்னணி
கூகுள் பே சேவைக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவது, யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் வருமானம் ஈட்டும், இந்த துறையில் உள்ள பிற நிறுவனங்களை பின்பற்றி கொண்டுவரப்பட்டுள்ளது.
யுபிஐ பயன்பாடு மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கான செலவை ஈடுசெய்யும் ஒரு உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், கூகுள் பே அறிமுகப்படுத்திய இந்த கட்டணம் அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் வலைத்தளத்தில் உள்ள தகவலின்படி, கட்டணம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படும்.
வங்கிக் கணக்குடன் நேரடியாக இணைக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் கிடையாது.
சந்தை ஆதிக்கம்
கூகுள் பேயின் சந்தைப் பங்கு மற்றும் பரிவர்த்தனை அளவு
இந்தியாவில் கூகுள் பே யுபிஐ பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஜனவரி 2025 நிலவரப்படி, கூகுள் பே மூலம் ₹8.26 லட்சம் கோடி மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம். இந்தியாவின் ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 37% கொண்டுள்ளது.
மேலும், போன்பேவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.