LOADING...
நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்த ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்கள்; டெலிவரி சேவை பாதிப்பு?
நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்த ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்கள்

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்த ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்கள்; டெலிவரி சேவை பாதிப்பு?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 25, 2025
05:53 pm

செய்தி முன்னோட்டம்

ஸ்விக்கி, Zomato, அமேசான், பிளிங்கிட் (Blinkit) போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் 'கிக் ஒர்க்கர்ஸ்' (Gig Workers) எனப்படும் விநியோக ஊழியர்கள், கிறிஸ்மஸ் (டிசம்பர் 25) மற்றும் புத்தாண்டு இரவு (டிசம்பர் 31) ஆகிய நாட்களில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்திய ஆப்-சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு (IFAT) மற்றும் தெலுங்கானா கிக் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. "மோசமடைந்து வரும் பணிச் சூழல்" மற்றும் "ஊதியக் குறைவு" ஆகியவற்றை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

கோரிக்கை

கிக் ஊழியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்

1. 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறி, அந்த முறையை ரத்து செய்ய கோருகின்றனர். 2. வெளிப்படையான மற்றும் நியாயமான ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும். 3. விபத்து காப்பீடு, தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். 4.உரிய விளக்கம் அளிக்காமல் ஊழியர்களின் கணக்குகளை முடக்குவதை நிறுத்த வேண்டும். 5. தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வழிமுறை பாகுபாடு இல்லாமல் நிலையான பணி ஒதுக்கீடு, ரூட்டிங் மற்றும் பணம் செலுத்தும் தோல்விகளுக்கான குறை தீர்க்கும் வசதி உள்ளிட்ட வலுவான app மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை மற்ற கோரிக்கைகளில் அடங்கும்.

பாதிப்பு

பாதிப்பு என்ன?

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த நிறுவனங்களை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியை புறக்கணிப்பதால், ஆர்டர் செய்த பொருட்கள் வந்து சேர்வதில் பெரும் தாமதம் அல்லது சேவை முடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணி நேர அழுத்தம் மற்றும் சமூக பாதுகாப்பின்மை காரணமாகத் தொழிலாளர்கள் "இறுதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement