LOADING...
அம்பானியை முந்திய அதானி! மீண்டும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் கௌதம் அதானி
முகேஷ் அம்பானியை விஞ்சி அதானி மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரர் ஆனார்

அம்பானியை முந்திய அதானி! மீண்டும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் கௌதம் அதானி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 17, 2026
01:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தொழில் துறையின் இரு பெரும் துருவங்களான கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி இடையே நிலவும் யார் பெரிய பணக்காரர் என்ற போட்டியில், தற்போது கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று கணிசமான வளர்ச்சியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப் பெரும் செல்வந்தராக கௌதம் அதானி உருவெடுத்துள்ளார். உலகப் பணக்காரர்களின் பட்டியலைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

சொத்து மதிப்பு

அதானி குழுமப் பங்குகளின் ஏற்றமும் சொத்து மதிப்பு உயர்வும்

இன்று பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் கீழ் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தில் வர்த்தகமாகின. குறிப்பாக அதானி பவர் 1 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 2 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உயர்வு கண்டன. அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனப் பங்குகளும் முறையே 0.44% மற்றும் 1.6% உயர்வடைந்தன. இந்த அதிரடி மாற்றத்தால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு $92.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதேசமயம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் $90.8 பில்லியனாக உள்ளது. இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 19வது இடத்தையும், அம்பானி 20வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

எலான் மஸ்க்

உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2026: எலான் மஸ்க் முதலிடம்

சர்வதேச அளவில் பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவன அதிபர் எலான் மஸ்க் $656 பில்லியன் சொத்து மதிப்புடன் அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ் ($286 பில்லியன்) மற்றும் ஜெஃப் பெசோஸ் ($269 பில்லியன்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மார்க் ஜுக்கர்பெர்க் $239 பில்லியனுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். 2026 ஆம் ஆண்டில் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட் சுமார் $44 பில்லியனை இழந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement