இபிஎஃப்ஓ 3.0: ரூ.5 லட்சம் வரை ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு உயர்வு; தாமதப்படுத்தினால் அதிகாரிகளுக்கு 12% அபராதம்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது கிளைம் செட்டில்மென்ட் நடைமுறையில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் தகுதியுள்ள சந்தாதாரர்களின் பிஎஃப் பணத்தை வெறும் 3 நாட்களுக்குள் செட்டில் செய்ய வேண்டும் என்று புதிய கடுமையான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அபராதம்
அதிகாரிகளுக்குப் பாயும் 12 சதவீத அபராத வட்டி
முன்பெல்லாம் பிஎஃப் பணத்தைப் எடுப்பதற்கு பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்த நிலையில், இனி தகுதியான விண்ணப்பங்கள் அனைத்தும் 3 நாட்களுக்குள் ப்ராசஸ் செய்யப்பட வேண்டும். ஒருவேளை, எவ்வித நியாயமான காரணமும் இன்றி பிஎஃப் கிளைம் பணத்தை 20 நாட்களுக்கு மேல் அதிகாரிகள் தாமதப்படுத்தினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தத் தொகைக்கு 12 சதவீத அபராத வட்டியும் விதிக்கப்படும் என இபிஎஃப்ஓ எச்சரித்துள்ளது.
ஆட்டோ செட்டில்மென்ட்
ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
இபிஎஃப்ஓ மேற்கொண்டு வரும் இபிஎஃப்ஓ 3.0 டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, மனிதர்களின் தலையீடு இல்லாத ஆட்டோமேட்டிக் கிளைம் செட்டில்மென்ட் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1 லட்சம் ரூபாயாக இருந்த இந்த ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு, தற்பொழுது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ அவசரம், திருமணம் அல்லது கல்விக்காக முன்பணம் கோரி விண்ணப்பிக்கும் பெரும்பான்மையான கிளைம்கள் கணினி மூலமாகவே உடனடியாக செட்டில் செய்யப்படும்.
சந்தாதாரர்கள்
சந்தாதாரர்கள் உடனடியாக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
இந்த 3 நாள் அதிவேக பிஎஃப் செட்டில்மென்ட் பலனைப் பெற வேண்டுமானால், சந்தாதாரர்கள் தங்களது யுஏஎன் கணக்கை சரியாகப் பராமரிக்க வேண்டும். ஊழியர்களின் யுஏஎன் எண் ஆக்டிவாக இருக்க வேண்டும், அத்துடன் அவர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்கள் தகுந்த கேஒய்சி முறைகளுடன் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலம் ஓடிபி சரிபார்ப்பை மேற்கொள்ள ஏதுவாக, தங்களது நடப்பில் உள்ள மொபைல் எண்ணை இணைத்திருப்பது கட்டாயமாகும்.
யுபிஐ
யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கப் புதிய திட்டம்
மத்திய அரசின் இந்த டிஜிட்டல் மாற்றங்கள் மூலம் காகித வேலைகளும், விண்ணப்பங்கள் தேவையின்றி நிராகரிக்கப்படுவதும் பெருமளவு குறையும். தற்போதைய 12 சதவீத பிஎஃப் பங்களிப்பு கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், சேவை உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் அடுத்தகட்டமாக, சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து யுபிஐ மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலமாகவே நேரடியாக பணம் எடுப்பதற்கான அதிநவீன வசதிகளையும் இபிஎஃப்ஓ விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.