சம்பளம் ரூ.25,000 ஆன பிறகு யாருக்கு பென்ஷன் கிடைக்கும்? பிஎஃப் ஓய்வூதியத் திட்டம் குறித்து EPFO விளக்கம்
செய்தி முன்னோட்டம்
கட்டாயப் பிஎஃப் பங்களிப்பிற்கான மாத சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட (EPS) தகுதி விதிகள் குறித்து இபிஎஃப்ஓ (EPFO) புதிய விளக்கத்தை அளித்துள்ளது. செப்டம்பர் 17, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தால், யார் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள் மற்றும் யாருக்கு ஓய்வூதியப் பிடித்தம் செய்யப்படும் என்பது குறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
தகுதியானவர்கள்
யாரெல்லாம் EPS ஓய்வூதியத் திட்டத்திற்குத் தகுதியானவர்கள்?
புதிய விதிகளின்படி, மாதச் சம்பளம் ரூ.25,000 அல்லது அதற்குக் குறைவாக உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) உறுப்பினர் சேர்க்கை கட்டாயமாகும்.
அதேவேளையில், இதற்கு முன் EPS திட்டத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், தற்போது புதிதாக பணியில் சேரும் போது அவரது மாதச் சம்பளம் ரூ.25,000-க்கு மேல் இருந்தால், அவருக்குப் புதிய EPS உறுப்பினர் தகுதி கிடைக்காது.
அதாவது, பழைய உறுப்பினர் நிலை மற்றும் பிஎஃப் விதிகள் அடிப்படையிலேயே ஓய்வூதியத் தகுதி தீர்மானிக்கப்படும்.
பலன்கள்
சம்பள வரம்பு உயர்வால் என்ன பலன்கள் கிடைக்கும்?
இந்த உச்சவரம்பு உயர்வால், ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வாங்கும் 51 லட்சத்திற்கும் அதிகமான கூடுதல் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF), ஓய்வூதியத் திட்டம் (EPS) மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகிய மூன்று முக்கிய சலுகைகளையும் பெறுவார்கள்.
ஓய்வூதியத்திற்கான கணக்கீட்டு சம்பள வரம்பு உயர்ந்ததால், நிறுவன உரிமையாளர் செலுத்தும் அதிகபட்ச மாத ஓய்வூதிய பங்களிப்பு (8.33%) ரூ.1,250-லிருந்து ரூ.2,083 ஆக அதிகரிக்கும்.
செய்ய வேண்டியவை
ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்படவில்லை எனில் செய்ய வேண்டியவை
நிறுவனத்தின் சார்பில் தங்களுக்குரிய ஓய்வூதிய பங்களிப்பு சரியாகப் பிடித்தம் செய்யப்படவில்லை என ஊழியர்கள் கருதினால், முதலில் தங்களது நிறுவன நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு EPFO அறிவுறுத்தியுள்ளது.
நிறுவனம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், EPFO-வின் EPFiGMS என்ற இணையவழி குறைதீர்ப்பு மையத்தில் புகார்களைப் பதிவு செய்யலாம்.
புகார் அளிக்கும் போது சம்பள சீட்டு மற்றும் வேலைவாய்ப்பு சான்றுகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.