1 முட்டை ரூ.10? சாமானியர்களின் முட்டை விலை திடீரென உயர எத்தனால் பெட்ரோல் தான் காரணமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எளிமையான புரதச்சத்து ஆதாரமாக விளங்கும் முட்டையின் விலை கடந்த ஓராண்டில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ணை விற்பனை விலை முட்டை ஒன்றுக்கு ரூ.7 தொட்டுள்ள நிலையில், சில்லறை வர்த்தகத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.9 முதல் ரூ.10 வரை விற்பனையாகி வருகிறது. வரவிருக்கும் குளிர்காலத்தில் முட்டையின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், இதன் விலை இன்னும் உயரக்கூடும் எனப் பண்ணை உரிமையாளர்களும் துறை சார்ந்த வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.
எத்தனால்
முட்டை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமா?
கோழிப் பண்ணை உணவில் சுமார் 50% முதல் 55% வரை சோளம் தான் பிரதான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
எஞ்சிய 45% சோயாபீன்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் EBP-E20 திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
இதனால், முன்பு கோழி பண்ணைகளுக்கு தீவனமாக சென்ற சோளம், தற்போது பெருமளவில் எத்தனால் தயாரிக்கும் ஆலைகளுக்குத் திருப்பி விடப்படுகிறது.
2024-25 எத்தனால் விநியோக ஆண்டில் சுமார் 125.75 லட்சம் மெட்ரிக் டன் சோளம் எத்தனால் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெறும் இரண்டே ஆண்டுகளில் எத்தனாலுக்கான சோளத்தின் பயன்பாடு, 8.3 லட்சம் டன்னிலிருந்து 15 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
உற்பத்திச் செலவு
உயரும் உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு
அதிகளவில் சோளத்தை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, உள்நாட்டுத் தேவை அதிகரித்ததால் 2024-25 நிதியாண்டில் 9.70 லட்சம் டன் சோளத்தை இறக்குமதி செய்து, நிகர இறக்குமதி நாடாக மாறியுள்ளது.
சோளத்தின் சந்தை விலை குவிண்டாலுக்கு ரூ.2,300 முதல் ரூ.2,645 வரை உயர்ந்துள்ளது.
கோழி வளர்ப்புக்கான ஒட்டுமொத்த செலவில் 65% முதல் 70% வரை தீவனத்திற்கான செலவு என்பதால், சோளத்தின் விலையேற்றம் நேரடியாக முட்டை மற்றும் கோழிக்கறியின் விலையில் எதிரொலிக்கிறது.
இது தவிர, சர்க்கரையை எத்தனால் தயாரிப்பிற்கு திருப்புவதால் சர்க்கரை விலையும், மற்ற புரத சத்துள்ள பொருட்களான பனீர் மற்றும் வே புரோட்டீன் விலையும் உயர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் பிட்னஸ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள்
அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
பாஜக அரசின் தவறான எத்தனால் கொள்கையினாலேயே ஏழைகளின் தட்டிலிருந்து மலிவான புரதமான முட்டை பறிக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இருப்பினும், சோளத்தின் உற்பத்தி 37% வரை உயர்ந்துள்ளதாகவும், பண்ணை மற்றும் எத்தனால் தேவைகளுக்கு போதிய தானிய இருப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
வரவிருக்கும் குளிர்காலத்தில் தேவை அதிகரிக்கும் போது முட்டை விலை மேலும் உயருமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.