அனில் அம்பானிக்கு எதிரான பணமோசடி வழக்கில் ₹3,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி
செய்தி முன்னோட்டம்
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை சுமார் ₹3,084 கோடி மதிப்புள்ள 40 சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது. முடக்கப்பட்டச் சொத்துக்களில் அம்பானியின் மும்பை பாலி ஹில் இல்லம் மற்றும் டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் சென்டர் ஆகியவையும் அடங்கும். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள நிலங்கள், நொய்டா மற்றும் காஜியாபாத்தில் உள்ள நிலப் பகுதிகள், மும்பை, புனே, தானே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ளச் சொத்துக்கள், அத்துடன் சென்னையில் ₹109.6 கோடி மதிப்புள்ள 29 குடியிருப்புகள் மற்றும் ஆந்திராவில் உள்ள நிலப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துக்களில் அலுவலக வளாகங்கள், குடியிருப்புப் பிரிவுகள் மற்றும் நிலப் பகுதிகள் அடங்கும்.
வழக்கு
வழக்கு விவரங்கள்
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (RCFL) ஆகிய நிறுவனங்கள் திரட்டிய பொதுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019 வரை, யெஸ் வங்கி இந்த ரிலையன்ஸ் நிறுவனங்களில் ₹5,010 கோடி முதலீடு செய்தது. ஆனால், 2019 டிசம்பருக்குள், இந்த முதலீடுகள் செயல்திறன் அல்லாத (non-performing) முதலீடுகளாக மாறி, யெஸ் வங்கிக்கு ₹2,796 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக, ஜூலை மாதம் அனில் அம்பானியின் 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே, கடந்த செப்டம்பரில் சிபிஐ அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.