LOADING...
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு! புதிய விலை விபரம்!
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு! புதிய விலை விபரம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 07, 2026
08:02 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு காரணமாக, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை தற்பொழுது ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. கடந்த மூன்று மாத கால இடைவெளியில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்வுக்கான பின்னணி

சர்வதேசப் பதற்றமும் கேஸ் விலை உயர்வும்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்க-ஈரான் போர் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு காரணமாக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 7 ஆம் தேதி அன்று, சர்வதேசப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.60 உயர்த்தப்பட்டது. இத்தகைய தொடர் விலையேற்றங்களுக்குப் பிறகும், அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜி விற்பனையில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தற்போதைய விலை உயர்வுக்கு முன்பாக, விற்கப்பட்ட ஒவ்வொரு எல்பிஜி சிலிண்டருக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சுமார் ரூ.703 வரை நஷ்டம் ஏற்பட்டு வந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

மெட்ரோ நகரங்களின் கட்டண ஒப்பீடு

நான்கு முக்கிய நகரங்களின் புதிய விலை விபரங்கள்

இந்த புதிய அறிவிப்பின்படி, டெல்லியில் 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் ரூ.913 இல் இருந்து தற்பொழுது ரூ.942 ஆக அதிகரித்துள்ளது. வர்த்தகத் தலைநகரான மும்பையில் சிலிண்டரின் விலை ரூ.941.50 ஆகவும், கொல்கத்தாவில் இதன் விலை ரூ.968 ஆகவும் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில், எல்பிஜி சிலிண்டரின் பழைய விலையான ரூ.928.50 தற்பொழுது ரூ.957.50 ஆக உயர்ந்து நுகர்வோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க-ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தெரியாததால், எரிபொருள் சந்தையில் நிலவும் இந்த ஏற்ற இறக்கங்கள் இப்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

Advertisement

பிற எரிபொருட்களின் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி கட்டண உயர்வு

கடந்த மே மாதம் முதல் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விலையையும் பலமுறை தொடர்ந்து உயர்த்தியுள்ளன. மே மாதத்திற்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்குக் கூட்டுத் தொகையாகச் சுமார் ரூ.7.50 வரையிலும் தற்பொழுது வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவான சிஎன்ஜி விலையும் கிலோவுக்குச் சுமார் ரூ.6 வரை உயர்த்தப்பட்டு நுகர்வோரை வாட்டி வதைக்கிறது. சர்வதேச எரிசக்தி வில உயர்வின் முழுப் பாரத்தையும் அரசு சாமானிய மக்கள் மீது சுமத்த அனுமதிக்கவில்லை என்றாலும், இந்த விலையேற்றம் நுகர்வோரைப் பாதித்துள்ளது.

Advertisement

மத்திய அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை

அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் விளக்கமும்

நாட்டில் போதிய அளவு எல்பிஜி சிலிண்டர்கள் கிடைப்பதையும், எரிபொருள் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதையும் உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. "உள்நாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நஷ்டக் கணக்கு இன்னும் கிட்டத்தட்ட 700 ரூபாய் வரம்பில் தான் நீடிக்கிறது" எனப் பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். வணிக மற்றும் தொழில்துறை எல்பிஜி பயன்பாடு மற்றும் முன்பதிவு காலங்களை 25 மற்றும் 45 நாட்களாக முறைப்படுத்தியதால் நஷ்ட அளவு ஓரளவுக் குறைந்துள்ளது. மேலும், விநியோக அங்கீகாரக் குறியீடு அடிப்படையிலான சிலிண்டர் விநியோக முறையும் இந்த நஷ்டக் குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவியுள்ளதாக அவர் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement