சாமானியர்களுக்குப் பெரும் சுமை! வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 மற்றும் வணிக சிலிண்டர் ரூ.115 அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் மார்ச் 7 முதல் அமலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பது விநியோகச் சங்கிலியில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விலை
முக்கிய நகரங்களில் புதிய விலை நிலவரம்
இந்த விலையேற்றத்தின்படி, டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.853 லிருந்து ரூ.913 ஆக உயர்ந்துள்ளது. மற்ற பெருநகரங்களிலும் இதே போன்ற உயர்வு காணப்படுகிறது. மும்பையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.912.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.939 ஆகவும் உள்ளது. சென்னையில் இதன் விலை ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ வணிக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ.115 உயர்த்தப்பட்டு, சென்னையில் அதன் விலை ரூ. 2,043.50 ஐ எட்டியுள்ளது.
சலுகை
உஜ்வாலா பயனாளிகளுக்கான சலுகை
விலை உயர்த்தப்பட்டாலும், பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்ற 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ. 300 என்ற மானியம் தொடர்ந்து வழங்கப்படும். ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை இந்த மானியம் அவர்களுக்குக் கிடைக்கும்.
மத்திய அரசு
எரிபொருள் இருப்பு குறித்து மத்திய அரசு உறுதி
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவினாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது 50 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 நாட்களுக்கான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் அடங்கும். பொதுமக்கள் வதந்திகளை நம்பி எரிபொருள் நிலையங்களில் கூட வேண்டாம் என்றும், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் விநியோகம் சீராக உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.