விமானக் கட்டணக் கட்டுப்பாடு நீக்கம்: மார்ச் 23 முதல் டிக்கெட் விலை உயருமா? மத்திய அரசு அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை நீக்குவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 21) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, கட்டணங்கள் தாறுமாறாக உயர்வதைத் தடுக்க இந்தத் தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், வரும் மார்ச் 23, 2026 முதல் இந்தக் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
இண்டிகோ
இண்டிகோ விவகாரத்தின் பின்னணி
டிசம்பர் 2025இல் இண்டிகோ நிறுவனத்தின் பைலட்டுகளைப் பணியமர்த்துவதில் ஏற்பட்ட கடும் சிக்கல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் முக்கியமான வழித்தடங்களில் விமானக் டிக்கெட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. இதைத் தடுக்கவே மத்திய அரசு பின்வரும் அவசரகாலக் கட்டணக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது: 500 கிமீ வரை: அதிகபட்சம் ₹7,500. 1000 - 1500 கிமீ (டெல்லி-மும்பை): அதிகபட்சம் ₹15,000. 1500 கிமீக்கு மேல்: அதிகபட்சம் ₹18,000.
எச்சரிக்கை
விலையை நியாயமாக வைக்க வேண்டும் என அரசு எச்சரிக்கை
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. விமானக் கட்டண நிலவரங்களை அரசு ரியல் டைம் முறையில் கண்காணிக்கும். தேவை அதிகமாக இருக்கும் நேரத்திலோ அல்லது நெருக்கடி காலங்களிலோ நியாயமற்ற முறையில் கட்டணத்தை உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிப்படையான கட்டண முறையைப் பின்பற்ற வேண்டும். தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச விமானப் போக்குவரத்து ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் உள்நாட்டுக் கட்டணக் கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளதால், வரும் கோடை விடுமுறை காலத்தில் விமானக் கட்டணங்கள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.