தீபாவளிக்கு வெள்ளி வாங்கும் முன் இதை செக் பண்ணுங்க; தூய்மை அளவு & 6-இலக்க HUID சரிபார்ப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் வெள்ளி நாணயங்கள், பூஜைப் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நகைகள் அதிகளவில் வாங்கப்படுகின்றன. தங்கத்தைப் போலவே வெள்ளிப் பொருட்களை வாங்கும்போதும் அவற்றின் தூய்மைத் தன்மை மற்றும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைகளை சரிபார்த்து வாங்குவது மிகவும் முக்கியமாகும். பிஐஎஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளியின் பல்வேறு தூய்மை அளவுகள் மற்றும் HUID சரிபார்ப்பு முறைகள் குறித்து நிபுணர்கள் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.
தூய்மை அளவுகள்
வெள்ளியின் பல்வேறு தூய்மை அளவுகளும் அவற்றின் பயன்பாடுகளும்
100% தூய்மையான வெள்ளி மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால், உறுதித் தன்மைக்காக தாமிரம் போன்ற பிற உலோகங்கள் கலக்கப்படுகின்றன.
999 என்பது 99.9% தூய்மையான வெள்ளியைக் குறிக்கும். இது முதலீட்டு நாணயங்கள் மற்றும் பார்களுக்கு ஏற்றது. 925 (92.5% ஸ்டெர்லிங் வெள்ளி) தினசரி அணியும் நகைகளுக்கும், 800 (80% தூய்மை) கொலுசு மற்றும் கனமான பாத்திரங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பொருட்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப சரியான தூய்மை அளவைத் தேர்வு செய்து வாங்க வேண்டும்.
ஹால்மார்க் முத்திரை
வெள்ளி பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமா?
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளி பொருட்களுக்கு அது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை (சுயவிருப்பத்தின் பேரிலானது).
இருப்பினும், ஒரு வெள்ளிப் பொருள் ஹால்மார்க் செய்யப்பட்டிருந்தால், அதில் பிஐஎஸ் சின்னம், SILVER என்ற வார்த்தை, தூய்மை எண் (எ.கா: 925, 999) மற்றும் 6 இலக்கங்கள் கொண்ட HUID குறியீடு ஆகியவை கட்டாயம் லேசர் முறையில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஹால்மார்க் செய்யப்படாத வெள்ளியையும் சட்டப்பூர்வமாக விற்க முடியும்.
சரிபார்க்கும் முறை
BIS Care செயலி மூலம் HUID குறியீட்டைச் சரிபார்க்கும் முறை
பொதுமக்கள் BIS Care என்ற அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள Verify HUID பிரிவில் வெள்ளிப் பொருளில் உள்ள 6 இலக்கக் குறியீட்டைப் பதிவிட வேண்டும்.
இதன் மூலம் அப்பொருளின் வகை, தூய்மை அளவு, தயாரித்த நகைக் கடை மற்றும் ஹால்மார்க் மையத்தின் விவரங்கள் திரையில் தோன்றும்.
இந்த விவரங்கள் நீங்கள் வாங்கும் பொருளுடனும், உங்களுக்கு வழங்கப்படும் ரசீதுடனும் சரியாக ஒத்துப்போகிறதா என்பதை உறுதிசெய்த பின்னரே பணத்தை செலுத்த வேண்டும்.