LOADING...
வணிக சிலிண்டர் விலை ₹218 வரை உயர்வு - சென்னையில் புதிய விலை என்ன?
வணிக சிலிண்டர் விலை ₹218 வரை உயர்வு

வணிக சிலிண்டர் விலை ₹218 வரை உயர்வு - சென்னையில் புதிய விலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2026
08:51 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, இந்தியாவில் எரிவாயு விலையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதியான இன்று, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. புதிய விலை மாற்றத்தின்படி, 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சென்னையில் ₹203 உயர்த்தப்பட்டு, தற்போது ₹2,246 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ₹195 உயர்ந்து ₹2,078.50 ஆகவும், மும்பையில் ₹2,031 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் அதிகபட்சமாக ₹218 உயர்த்தப்பட்டு, புதிய விலை ₹2,208 ஆக மாறியுள்ளது. இதேபோல், 5 கிலோ எடையுள்ள சிறிய ரக சிலிண்டர்களின் விலையும் ₹51 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

போர்

சர்வதேசப் போர் சூழலும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கமும்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 50% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதே இந்த விலை ஏற்றத்திற்கு முதன்மைக் காரணமாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால், இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ளதை அடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்களான IOC, BPCL மற்றும் HPCL ஆகியவை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை

வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்தாலும், இல்லத்தரசிகளுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெல்லியில் இதன் விலை ₹913 ஆக நீடிக்கிறது. முன்னதாக மார்ச் 7-ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹60 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையில் நீடித்து வருகிறது.

Advertisement