உணவு விநியோகம் முடங்கும் அபாயம்! பிரதமருக்கு சென்னை ஹோட்டல்கள் சங்கம் அவசரக் கடிதம்; முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் உணவகத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, சென்னை ஹோட்டல்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்ச் 9, 2026 அன்று அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
முக்கிய கோரிக்கைகள்
கடிதத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கோரிக்கைகள்
சங்கத்தின் தலைவர் எம்.ரவி கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: அத்தியாவசியச் சேவை: உணவகத் துறையை அத்தியாவசிய சேவையாக அங்கீகரிக்க வேண்டும். மருத்துவமனைகள், ஐடி பூங்காக்கள், கல்லூரி விடுதிகள் மற்றும் ரயில் பயணிகளுக்குத் தேவையான உணவை வழங்கும் இந்தத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். முன்பதிவுகள் பாதிப்பு: பல நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் ஏற்கனவே சுப நிகழ்ச்சிகளுக்காக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. சிலிண்டர் தட்டுப்பாட்டால் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கான பாதிப்பு: வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால், அது உணவு விநியோகச் சங்கிலியைப் பாதித்து, பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை உண்டாக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Respected Sir,@PMOIndia @narendramodi@HardeepSPuri
— Chennai Hotel Association (@ChennaiHotelAs1) March 9, 2026
The situation has now become even more critical. Commercial LPG distributors have completely stopped supplying cylinders, stating that they have no stock available. As a result, many restaurants are forced to shut down 👇 📣 pic.twitter.com/1deODRzni4
நிலவரம்
தற்போதைய சூழல்
மத்திய அரசு வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ₹2,043.50 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூர் உணவகங்கள் ஏற்கனவே மார்ச் 10 முதல் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், சென்னையிலும் அதே போன்ற சூழல் உருவாகாமல் தடுக்கப் பிரதமர் மோடியின் தலையீட்டைச் சங்கம் கோரியுள்ளது. சென்னை, பெங்களூர் மட்டுமல்லாது மும்பை உள்ளிட்ட பல இடங்களிலும் இதே சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.