தங்கம் போலவே வெள்ளிக்கும் ஹால்மார்க்கிங் கட்டாயம்? - மத்திய அரசு அதிரடி திட்டம்
செய்தி முன்னோட்டம்
தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க்கிங் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப் போலவே, இனி வெள்ளி ஆபரணங்களுக்கும் ஹால்மார்க்கிங் முத்திரையை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. Moneycontrol செய்தியின்படி, நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கவும், வெள்ளிப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும் மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் இந்த முக்கிய முடிவை எடுக்க உள்ளது. வெள்ளியில் கலக்கப்படும் உலோகங்களின் அளவைக் கட்டுப்படுத்தி, அதன் தூய்மையை (Purity) உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும். சர்வதேச சந்தையில் நிலவும் சூழல் மற்றும் தொழில்முறை தேவைகள் காரணமாக வெள்ளியின் விலை அண்மைக் காலமாகக் கடும் உயர்வை சந்தித்து வருகிறது. இதனால், போலி அல்லது தரம் குறைந்த வெள்ளியின் விற்பனையை தடுக்க அரசு முனைகிறது.
காரணம்
Hallmarking செய்ய வேண்டியதன் காரணம் மற்றும் நடைமுறை
இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வெள்ளி வாங்கும் போது ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும். மேலும், ஹால்மார்க்கிங் செய்யப்பட்ட வெள்ளியை மறுவிற்பனை செய்யும் போது சரியான மதிப்பைப் பெற முடியும். இதற்கான வரைவு வழிகாட்டுதல்களை இந்தியத் தர நிர்ணய அமைப்பு(BIS) தயாரித்து வருகிறது. தங்கம் போலவே குறிப்பிட்ட எடையுள்ள அல்லது குறிப்பிட்ட தரத்திலான வெள்ளிப் பொருட்களுக்கு முதற்கட்டமாக இந்த விதிமுறை அமல்படுத்தப்படலாம். முதலில் முக்கிய நகரங்களிலும், பின்னர் நாடு முழுவதும் படிப்படியாக இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். நகை விற்பனையாளர்கள் தங்கள் இருப்புக்களை ஹால்மார்க்கிங் செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தங்கத்திற்கு 14, 18 மற்றும் 22 காரட் அடிப்படையில் ஹால்மார்க்கிங் செய்யப்படுவது போல, வெள்ளிக்கும் அதன் தூய்மைக்கேற்ப முத்திரைகள் வழங்கப்பட உள்ளன.