LOADING...
புல்லட் ரயில் வேகத்திற்கு மாறும் இந்தியா; தமிழகத்திற்கு 2 உள்ளிட்ட 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட்டில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அறிவிப்புகள்

புல்லட் ரயில் வேகத்திற்கு மாறும் இந்தியா; தமிழகத்திற்கு 2 உள்ளிட்ட 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
11:55 am

செய்தி முன்னோட்டம்

இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நாட்டின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியை இணைக்கும் வகையில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இவை வெறும் ரயில் பாதைகள் மட்டுமல்ல, நகரங்களை இணைக்கும் வளர்ச்சி இணைப்புகளாக செயல்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வேகமான பயணத்தை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள அந்த 7 வழித்தடங்கள் மும்பை - புனே, ஹைதராபாத் - பெங்களூரு, டெல்லி - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி, புனே - ஹைதராபாத், ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு ஆகும். இந்தத் திட்டங்கள் பெரிய நகரங்களை வளர்ந்து வரும் தொழில் மையங்களுடன் இணைத்து, பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும்.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து

இந்திய ரயில்வே மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன: மூலதனச் செலவு (Capex): நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.12.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் கோடி அதிகமாகும். புதிய சரக்கு ரயில் பாதை (East-West DFC): மேற்கில் உள்ள சூரத் (குஜராத்) நகரையும், கிழக்கில் உள்ள டன்குனி (மேற்கு வங்கம்) நகரையும் இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு ரயில் பாதை (Dedicated Freight Corridor) உருவாக்கப்படும். நீர்வழிப் போக்குவரத்து: அடுத்த 5 ஆண்டுகளில் 22 புதிய தேசிய நீர்வழிச் சாலைகள் செயல்பாட்டிற்கு வரும். குறிப்பாக ஒடிசாவின் தால்சர் மற்றும் அங்குல் பகுதிகளைத் துறைமுகங்களுடன் இணைக்கும் நீர்வழிப்பாதை-5-க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வளர்ச்சி

சிறு நகரங்களின் வளர்ச்சி (Tier 2 & Tier 3 Cities)

மெட்ரோ நகரங்களின் நெரிசலைக் குறைக்கவும், சிறு நகரங்களை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது: இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் (Tier 2 & 3) உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படும். உள்கட்டமைப்பு அபாய உத்தரவாத நிதி (Infrastructure Risk Guarantee Fund): பெரிய திட்டங்களில் தனியார் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க ரூ.25,000 கோடி மதிப்பிலான புதிய காப்பீட்டு நிதி உருவாக்கப்படும்.

Advertisement