பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சருக்கு ஏன் தயிர், சர்க்கரை வழங்கப்படுகிறது? சுவாரஸ்ய பின்னணி
செய்தி முன்னோட்டம்
இன்று (பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை), இந்தியாவின் பொருளாதாரப் பாதையைத் தீர்மானிக்கும் மத்திய பட்ஜெட் 2026-27 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தியக் கலாச்சாரம் என்பது சடங்குகள் மற்றும் நேர்மறையான நம்பிக்கைகளுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக ஒரு தனித்துவமான இந்தியப் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதுதான் நிதியமைச்சருக்கு வழங்கப்படும் தயிர் மற்றும் சர்க்கரை. இந்தியப் பாரம்பரியத்தில், ஒரு முக்கியமான காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லும் போதோ தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
காரணங்கள்
தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதற்காண காரணங்கள்
வெற்றி மற்றும் செழிப்பு: தயிர் மற்றும் சர்க்கரை கலவை செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் எடுத்துக்கொண்ட காரியம் வெற்றிகரமாக முடிவதைக் குறிக்கிறது. குடியரசுத் தலைவரின் வாழ்த்து: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், நிதியமைச்சர் மற்றும் அவரது குழுவினர் குடியரசுத் தலைவரைச் சந்திப்பது வழக்கம். அப்போது, நாட்டின் நிதிநிலை அறிக்கை சிறப்பாக அமையவும், தேசத்தின் பொருளாதாரப் பாதை மேன்மையடையவும் வாழ்த்தும் விதமாக, குடியரசுத் தலைவர் நிதியமைச்சருக்குத் தயிர் மற்றும் சர்க்கரை ஊட்டி விடுவார். இது ஒரு நற்செயலின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
சாதனை
நிர்மலா சீதாராமனின் புதிய சாதனை
இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டுகிறார். 9வது பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் இன்று தனது 9வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் சாதனையை (9 பட்ஜெட்டுகள்) இவர் சமன் செய்கிறார். அடுத்த இலக்கு: இந்தியாவில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சாரும் (10 பட்ஜெட்டுகள்). அந்தச் சாதனையை எட்டுவதற்கு நிர்மலா சீதாராமன் இன்னும் ஒரு படி மட்டுமே பின்னால் உள்ளார்.
எதிர்பார்ப்புகள்
பட்ஜெட் 2026 எதிர்பார்ப்புகள்
இந்த ஆண்டு சுமார் ரூ.54.1 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 7.9 சதவீதம் அதிகமாகும். உலகளாவிய பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியில், இந்தியாவின் வளர்ச்சியைத் தக்கவைக்கவும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவும் இந்தப் பட்ஜெட் முக்கியப் பங்கு வகிக்கும்.