பட்ஜெட் 2024: நீண்ட கால மூலதன ஆதாய வரி உயர்த்தப்பட்டது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூலதன ஆதாய வரிவிதிப்பு முறைக்கு பல மாற்றங்களை முன்மொழிந்துள்ளார். குறுகிய கால மூலதன ஆதாயங்கள்(STCG) மீது புதிதாக 20% வரி விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான வரிகள் (LTCG) 10% இல் இருந்து 12.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மூலதன ஆதாய விலக்குக்கான வரம்பு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து நிதி மற்றும் நிதி அல்லாத சொத்துக்களின் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்திருக்கும் பட்டியலிடப்பட்ட நிதிச் சொத்துக்கள் 'நீண்ட காலம்' என்று வகைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாக உயர்வு
கூடுதலாக, மூலதன ஆதாயங்களுக்கான விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கும் குறைவான பங்கு முதலீட்டுவரியை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், 12 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் பங்குகளுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பட்டியலிடப்படாத கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு தற்போதுள்ள வரி விகிதத்தின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்படும். சில்லறை முதலீட்டாளர்கள், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIகள்) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்(FIIக்கள்) மத்தியில் இந்திய வரி முறையின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.