'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு
கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில இந்திய ஆப்களை நீக்கியது குறித்து இன்று பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதோடு, இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட இந்திய ஸ்டார்ட்அப்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தோடு வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட்அப்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், எனவே அவற்றின் தலைவிதியை எந்த பெரிய நிறுவனமும் முடிவு செய்ய விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
சேவைக் கட்டணம் செலுத்துதல் தொடர்பான சர்ச்சையில், பாரத் மேட்ரிமோனி போன்ற சில பிரபலமான மேட்ரிமோனி ஆப்கள் உட்பட 10 நிறுவனங்களின் ஆப்களை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நேற்று அகற்றியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் வைஷ்ணவ், "இந்தியா மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் ஸ்டார்ட்அப்களுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைக்கும்." என்று கூறியுள்ளார். கூகுள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆப் டெவலப்பர்களை அரசாங்கம் அடுத்த வாரம் சந்தித்து இந்த பிரச்சனையை தீர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "நான் ஏற்கனவே கூகுளிடம் பேசிவிட்டேன்... பட்டியலிடப்பட்ட ஆப் டெவலப்பர்களையும் ஏற்கனவே அழைத்துவிட்டேன். அடுத்த வாரம் அவர்களை சந்திப்போம். இதை அனுமதிக்க முடியாது." என்று வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.