அமேசானில் பெரும் பணிநீக்க நடவடிக்கை: 30,000 கார்ப்பரேட் ஊழியர்கள் நீக்கம்?
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon) நிறுவனத்தில், நிறுவன செலவுகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரும் பணிநீக்கத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடைக்கப்பெற்ற செய்திகளின்படி, அமேசான் தனது கார்ப்பரேட் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை அதிக அளவில் குறைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன்படி, சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்று இந்தியா டுடே வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
காரணம்
பணி நீக்கத்திற்கான காரணம்
கொரோனா தொற்றுநோய் காலத்தின்போது ஏற்பட்ட அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக அமேசான் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்தது. தற்போது அந்த நிலை சமநிலையை அடைந்துள்ளதால், அதிகப்படியான பணியமர்த்தலைச் சரிகட்டுவதற்கும், ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைப்பதற்கும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது, 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிறகு அமேசானில் நிகழும் மிகப் பெரிய பணி நீக்க நடவடிக்கையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரமே பணிநீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் விவரங்கள்
அமேசானின் பணி நீக்கத் திட்டம்: கூடுதல் விவரங்கள்
அமேசான் நிறுவன பணிநீக்க நடவடிக்கையானது, அதன் ஒட்டுமொத்தப் பணியாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் கார்ப்பரேட் (Corporate) பிரிவில் மட்டும் சுமார் 3,50,000 ஊழியர்கள் உள்ளனர். இந்த கார்ப்பரேட் ஊழியர்களின் எண்ணிக்கையிலிருந்து பார்க்கும்போது, 30,000 என்பது கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை அமேசானின் பல்வேறு முக்கியப் பிரிவுகள் முழுவதும் இருக்கும் எனத் தெரிகிறது.
பிரிவுகள்
பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் எவை?
மனித வளப் பிரிவு (Human Resources / People Experience and Technology), சாதனங்கள் மற்றும் சேவைகள் (Devices and Services)- நிறுவனத்தின் அலெக்சா (Alexa) போன்ற சாதனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் பிரிவிலும் ஆட்குறைப்பு இருக்கும். செயல்பாடுகள் (Operations) மற்றும் நிர்வாகச் செயல்முறைகள் (Administrative Procedures) பிரிவுகளிலும் பணி நீக்கம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து எவ்வாறுத் தொடர்பு கொள்வது, இந்தச் செய்தியை எப்படி அணுகுவது என்பது குறித்துப் பாதிக்கப்பட்ட அணிகளின் மேலாளர்களுக்கு (Managers) திங்கட்கிழமை அன்றே சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பணிநீக்க செய்தி குறித்த அறிவிப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் Email வழியாக ஊழியர்களுக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.