8வது ஊதியக் குழு வந்தாச்சு; அதிகாரப்பூர்வ இணையதளம் தொடக்கம்; சம்பளம் எவ்வளவு உயரும்? ஊழியர்களுக்கு கடைசி வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு, தனது அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக 8cpc.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் தரவு சேகரிப்புப் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்துப் பதிவு
டிஜிட்டல் கேள்வித்தாள் மற்றும் கருத்துப் பதிவு
புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வெளிப்படையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 18 கேள்விகள் கொண்ட விரிவான கேள்வித்தாள் ஒன்றை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். யார் பங்கேற்கலாம்?: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், பல்வேறு அமைச்சகங்கள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இதில் பங்கேற்கலாம். எப்படிப் பதிவு செய்வது?: இந்தக் கருத்துக்கள் 'MyGov' தளம் வழியாக மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. மின்னஞ்சல் அல்லது காகித வடிவிலான கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கடைசித் தேதி: கருத்துக்களைச் சமர்ப்பிக்க மார்ச் 16, 2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள்
சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்
இந்தக் கேள்வித்தாள் மூலம் பெறப்படும் பதில்கள், வருங்கால ஊதிய விகிதங்கள் மற்றும் ஓய்வூதியத் திருத்தங்களை முடிவு செய்யப் பயன்படுத்தப்படும். ஃபிட்மென்ட் ஃபாக்டர்: இது 1.83 முதல் 2.86 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. பரிந்துரைகள்: ஊழியர்களின் பதவி உயர்வு, கொடுப்பனவுகள் மற்றும் பணிக்கால சலுகைகள் குறித்துப் பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். காலக்கெடு: ஊதியக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அரியர்
அமலாக்கம் மற்றும் அரியர் நிலவரம்
8வது ஊதியக் குழு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். ஒருவேளை அறிக்கை சமர்ப்பிக்கத் தாமதமானால், அது 2027 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படலாம். இருப்பினும், 2026 ஜனவரி முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையாக வழங்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள 7 வது ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பர் 31 உடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.