அக்டோபர் 1 முதல் அமலாகிறது ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான GST வரி விதிப்பு
ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க, கடந்த ஜூலை-11ம் தேதி நடைபெற்ற, அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி கோவா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன. ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான இந்த வரி விதிப்பை எப்போது அமல்படுத்துவது என்பது குறித்து நேற்று நடைபெற்ற முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான வரி விதிப்புக்கு டெல்லி நிதியமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், சிக்கிம் மற்றும் கோவா மாநில நிதியமைச்சர்கள் முகமதிப்பின் மீது அல்லாமல், மொத்த விளையாட்டு வருவாயின் மீது வரிவிதிக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
எப்போது முதல் அமலாகிறது புதிய வரி விதிப்பு:
ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான வரி விதிப்புக்கு மேற்கூறிய சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மாற்றங்களைக் கோரியும் வரும் நிலையில், கர்நாடகா, குஜராத், மகராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வரி விதிப்புக்கு ஆதரவாக இருப்பதாகத் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் சூதாட்டங்கள் மீதான் இந்த புதிய வரி விதிப்பானது வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். அக்டோபரில் அமலானது முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு பிறகு வரி விதிப்பின் தாக்கம் குறித்து மறுமதிப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.