டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது உலகின் முதல் பறக்கும் கார்
உலகின் முதல் பறக்கும் காரின் மாதிரியை அமெரிக்காவில் நடைபெற்று வரும் டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தியிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த 'அலெஃப் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம். இந்த பறக்கும் காருக்கான அனுமதியை கடந்த ஜூன் மாதமே அலெஃப் நிறுவனம் பெற்றிருக்கிறது. மேலும், வானில் இயக்குவதற்கு உகந்த வாகனம் என்ற சான்றிதழையும் அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைப்பிடமிருந்து பெற்றிருக்கிறது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ். தேவையான அனுமதிகளை அனைத்து அமைப்புகளிடமும் பெற்றிருக்கும் நிலையில், சாலைகளிலும் சரி, வானத்திலும் சரி, அலெஃப் நிறுவனத்தால் இந்தக் காரை ஓட்டி பரிசோதனை செய்ய முடியும். 2022ம் ஆண்டே இந்த பறக்கு காருக்கான முன்பதிவை அலெஃப் நிறுவனம் துவக்கிய நிலையில், இது வரை 500 பேர் இந்தக் காரை வாங்க முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
உலகின் முதல் பறக்கும் கார்:
இரண்டு பேர் வரை பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பறக்கும் காரானது தோராயமகா 3 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2.46 கோடி) விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த பறக்கும் காரானது சாலையில் 200 மைல்கள் தொலைவிற்கும், வானில் 110 மைல்கள் வரையும் பறக்கும் ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. தற்போது டெட்ராய்டு ஆட்டோ ஷேவில் காட்சிப்படுத்தப்பட்டிப்பது மாதிரி வடிவம் மட்டுமே, இறுதி தயாரிப்பு வடிவம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓவான ஜிம் டக்கோவ்னி. மேலும், இந்தக் காரை இயக்கக் கற்றுக் கொள்வதற்கு 15 நிமிடங்கள் மட்டும் போதும் எனவும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.