Loading...
"ஏத்தர் முதல் ஹோண்டா வரை!" இந்தியாவில் வரிசையாகக் களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்; முழு விவரம்
இந்தியாவில் அறிமுகமாகும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

"ஏத்தர் முதல் ஹோண்டா வரை!" இந்தியாவில் வரிசையாகக் களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்; முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
04:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் முன்னணி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, தனது புதிய இஎல் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள கோனார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 29 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளது. ₹1 லட்சம் முதல் ₹1.25 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்கூட்டர், 7 அங்குல டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்ட குடும்பப் பயன்பாட்டிற்கான மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் குடும்ப வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வடிவமைத்துள்ள சிம்பிள் அரைவ் மாடலை செப்டம்பர் 2 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா

ஹோண்டா கியூசி3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தனது புதிய கியூசி3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உலகளவில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 3 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளதால், ஒற்றைக் சார்ஜில் 145 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது.

மேலும் 5 அங்குல டிஎஃப்டி திரை, ஹோண்டா ரோட்சின்க் இணைப்பு வசதி மற்றும் 32 லிட்டர் சீட் அடியில் சேமிப்பு இடம் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இதன் இந்திய அறிமுகத் தேதி மற்றும் விலை விபரங்கள் குறித்து ஹோண்டா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

எதிர்காலம்

வின்ஃபாஸ்ட் வைப்பர் மற்றும் இந்திய சந்தையின் எதிர்காலம்

வியட்நாமைச் சேர்ந்த பிரபல வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட், இந்தியாவில் தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகன வணிகத்தை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

இதன் முதற்கட்டமாக, தனது வைப்பர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமை வடிவமைப்பை இந்தியாவில் பதிவு செய்துள்ளது.

4.8 கிலோவாட் பேட்டரி மற்றும் 156 கிமீ ரேஞ்ச் கொண்ட இந்த மாடல், இந்திய சந்தைக்கு ஏற்ப சில சிறிய மாற்றங்களுடன் 2026 பிற்பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பல நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய மாடல்களைக் களமிறக்குவது இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் போட்டியை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய தேர்வுகளை வழங்கும்.

ADVERTISEMENT