எலக்ட்ரிக் வாகன உற்பத்தி விரிவாக்கம்: அல்ட்ராவயலெட்டிற்கு சோஹோ மற்றும் லிங்கோட்டோ நிறுவனங்களிடமிருந்து $45 மில்லியன் நிதி
செய்தி முன்னோட்டம்
மின்சார இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் பெங்களூரைச் சேர்ந்த அல்ட்ராவயலெட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) நிறுவனம், தனது சீரிஸ் இ நிதி திரட்டும் சுற்றின் ஒரு பகுதியாக, சோஹோ நிறுவனம் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான லிங்கோட்டோ ஆகியவற்றிலிருந்து $45 மில்லியன் (சுமார் ₹375 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது. இந்த முதலீடு, அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் முதன்மை தயாரிப்புகளான F77 பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட X-47 க்ராஸ்ஓவர் எலக்ட்ரிக் பைக் ஆகியவற்றின் உற்பத்தித் திட்டங்களை ஊக்குவிக்கும். மேலும், இந்த நிதி, மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்குதல் மற்றும் வரவிருக்கும் 'ஷாக்வேவ்', 'டெசரெக்ட்' போன்ற புதிய தளங்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
சர்வதேச நாடுகள்
சர்வதேச நாடுகளிலும் கால் பதித்த அல்ட்ராவயலெட்
இந்தியாவில், அல்ட்ராவயலெட் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் 30 நகரங்களில் தன் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 100 நகரங்களை இலக்காகக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில், F77 மோட்டார்சைக்கிள் ஏற்கனவே இங்கிலாந்து உட்பட 12 ஐரோப்பிய நாடுகளில் கால்பதித்துள்ளது. சோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு, மணி வேம்பு, குமார் வேம்பு மற்றும் லிங்கோட்டோ போன்ற நிறுவனங்களின் ஆதரவு, இந்தியப் புத்தாக்கத்திற்குப் பலம் சேர்க்கிறது என்று அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நாராயண் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்த முதலீடு, அதிகரித்து வரும் தேவைக்கேற்ப உற்பத்தியை விரிவாக்கவும், மின்சார மோட்டார் சைக்கிள் சந்தையில் வலுவான பங்கை அடையவும் வழிவகுக்கும் என்று இணை நிறுவனர் நீரஜ் ராஜ்மோகன் கூறியுள்ளார்.