'அப்பாச்சி RTX' என்ற புதிய பெயரை டிரேட்மார்க் செய்த டிவிஎஸ் நிறுவனம்
தற்போது அப்பாச்சி பிராண்டிங்கின் கீழ் இந்தியாவில் ஆறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ் நிறுவனம். தற்போது, புதிதாக ஒரு பெயரை அப்பாச்சி பிராண்டிங்கின் கீழ் டிரேட்மார்க்கிற்காக அந்நிறுவனம் பதிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 'அப்பாச்சி RTX' என்ற புதிய பைக் மாடலுக்கான பெயரை பதிவு செய்திருக்கிறது டிவிஎஸ் நிறுவனம். RTR 160, RTR 160 4V, RTR 160 RP, RTR 180, RTR 200 4V மற்றும் RR 310 ஆகிய ஆறு அப்பாச்சி மாடல்களை தற்போது டிவிஎஸ் நிறுவனம் விற்பனையில் வைத்திருக்கிறது. இவற்றில் ஃபேர்டு பைக்காக விற்பனையில் இருப்பது RR 310 மட்டுமே. மற்ற அனைத்து மாடல்களுமே நேக்கட் பைக்குகளாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதிய நேக்கட் வெர்ஷன்:
புதிய நேக்கட் வெர்ஷன் பைக் ஒன்றை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. மேற்கூறிய RR 310 ஃபேர்டு பைக்கையே 'அப்பாச்சி RTX' என்ற பெயரில் நேக்கட் வெர்ஷனாக டிவிஎஸ் நிறுவனம் வெளியிட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், RR 310-ன், 33hp பவர் மற்றும் 27Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, சிங்கிள் சிலிண்டர் கொண்ட 312 சிசி இன்ஜினையே புதிய நேக்கட் வெர்ஷனிலும் டிவிஎஸ் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஃபேர்டு பைக்கின் ட்யூனிங்கோடு இல்லாமல், கொஞ்சம் மாற்றி ட்யூன் செய்யப்பட்ட இன்ஜினாக இந்த புதிய இன்ஜின் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.