
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் டிவிஎஸ் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் குறித்த டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ் நிறுவனம். அடுத்த ஆகஸ்ட் 23 அன்று துபாயில் புதிய அறிமுகம் ஒன்றை செய்யவிருப்பதாக அந்த டீசரில் குறிப்பிட்டிருக்கிறது டிவிஎஸ்.
தற்போது இந்தியாவில் ஐக்யூப் என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 'க்ரெயான்' என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் ஒன்றை காட்சிப்படுத்தியிருந்தது டிவிஎஸ்.
ஒரு ஸ்கூட்டரைப் போலவே, ஆனால் பைக்கின் டிசைனையும் ஆங்காங்கே தெளிக்கப்பட்டு மிகவும் ஸ்டைலான தோற்றத்துடன் க்ரெயான் கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியிருந்தது டிவிஎஸ்.
அந்த கான்செப்ட் ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிஎஸ்
டிவிஎஸ்ஸின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:
2017-லேயே ENTORQ என்ற ஸ்கூட்டர் பெயரை டிரேட்மார்க் செய்திருக்கிறது டிவிஎஸ். ஐசி இன்ஜின் கொண்ட Ntorq என்ற ஸ்கூட்டரை டிவிஎஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
எனவே, Ntorq-ன் எலெக்ட்ரிக் வெர்ஷனாக e-Ntorq என்ற பெயரைக் கொண்ட ஸ்கூட்டராக புதிய ஸ்கூட்டரை டிவிஎஸ் அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் காட்சிப்படுத்தியிருந்த க்ரெயான் கான்செப்ட் மாடலில் செங்குத்தான எல்இடி முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தியிருந்தது டிவிஎஸ்.
தற்போது வெளியிட்டிருக்கும் டீசரிலும், செங்குத்தான முகப்பு விளக்கு போன்ற தோற்றத்தை கருப்பு நிற பேக்கிரவுண்டில் இருப்பது போல வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. எனவே, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது அதனை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.