Page Loader
எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் முடிவில் TVS!
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை அதிகரிக்கும் டிவிஎஸ்

எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் முடிவில் TVS!

எழுதியவர் Prasanna Venkatesh
May 05, 2023
12:01 pm

செய்தி முன்னோட்டம்

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பை அதிகரிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது டிவிஎஸ் பைக் தயாரிப்பு நிறுவனம். இனி வரும் மாதங்களில் நிறைய புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதனால், கூடுலாக எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் எலெக்ட்ரி இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், எந்த நாட்டிற்கு எந்த விதமான வாகனங்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்யவிருக்கிறது என்பது குறித்த தெளிவான தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. கடந்த இரு மாதங்களாக உதிரிபாகங்களின் தட்டுப்பாடு காரணமாக டிவிஎஸ் ஐ-க்யூபின் தயாரிப்பு 48% குறைந்திருந்த நிலையில், இம்மாதம் முதல் அதன் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ்

டிவிஎஸ்ஸின் திட்டம் என்ன? 

இது குறித்த டிவிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி K.கோபால தேசிகன் பேசும் போது, "நடப்பு காலாண்டின் இறுதியில் சரக்குப் பயன்பாடு மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான முதல் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் வெளியிடும். அடுத்த ஒன்பது முதல் பதினைந்து மாதங்களில் பல்வேறு விலைகளில், பல்வேறு பேட்டரி அளவுகளில் பல புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வெளியிடுவோம்" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், ஐ-க்யூபிற்கு ஏற்கனவே 30,000 ஆர்டர்கள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31-ல் முடிவடைந்த கடந்த காலாண்டில் டிவிஎஸ் நிறுவனத்தின் லாபம் 49.5% அதிகரித்து ரூ.410.27 கோடியாக பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.