எப்படி இருக்கிறது 'ட்ரையம்ப் ஸ்பீடு 400'?: ரிவ்யூ
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இந்திய பைக் தயாரிப்பாளர்கள் எல்லாம் சற்றே கலக்கத்தில் தான் இருக்கிறார்கள். காரணம், வெளிநாட்டு பைக் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் புதிய பைக்குகளை வெளியிட்டது தான். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துவது எப்போதும் நடக்கும் விஷயம் தானே என்று தான் தோன்றும். ஆனால், ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் ஆகிய ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் செக்மண்டில் பைக்குகளை வெளியிட்டால் என்ன ஆகும். அதுவும் நாம் எதிர்பார்ப்பதைவிட மிகக்குறைந்த விலையில். ஆம், ட்ரையம்ப் நிறுவனத்தின் ஸ்பீடு 400 பைக்கானது குறைந்தபட்சம் ரூ.2.55 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலாவது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, ரூ.2.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டு அதிர்ச்சியளித்திருக்கிறது ட்ரையம்ப்.
ட்ரையம்ப் ஸ்பீடு 400: டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டி
ரூ.2.55 லட்சம் என்ற விலையை எதிர்பார்த்திருந்ததற்கு காரணம் ஸ்பீடு 400-ன் பில்ட் தரம் தான். ப்ரீமியம் பைக் என்ற பெயருக்கேற்ற வகையில், ஸ்பீடு 400-ல் பயன்படுத்தியிருந்த பொருட்கள் முதல் டிசைன் வரை அனைத்தும் ப்ரீமியமாகவே இருந்தது. பட்ஜெட் பைக் தானே என நினைக்காமல், தங்களது ப்ரீமியம் பைக்கில் உள்ள சிறப்பான விஷயங்களை இங்கேயும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் கொடுக்க முயற்சி செய்திருக்கிறது ட்ரையம்ப். ஸ்பீடு ட்வின் 900 மற்றும் 1200-ல் இருக்கும் சில டிசைன் எலமண்ட்களை புதிய ஸ்பீடு 400-லும் நம்மால் பார்க்க முடியும். முழுவதும் எல்இடி விளக்குகள், யுஎஸ்டி ஃபோர்க்ஸ் மற்றும் ஆங்காங்கே க்ரோம் நிறம் என பார்ப்பதற்கே மிகவும் ஸ்டைலாக இருக்கிறது ஸ்பீடு 400.
ட்ரையம்ப் ஸ்பீடு 400: இன்ஜின்
ஒரு வாகனத்தின் மிக முக்கியமாக பாகம் அதன் இன்ஜின் தான். மற்ற அம்சங்கள் சிறப்பாக இருந்து இன்ஜின் சரியாக இல்லை என்றால், மற்றவை அனைத்தும் வீண் தான். ஆனால், இந்த அந்த பேச்சுக்கே இடமில்லை. இந்த ஸ்பீடு 400-ல் சிங்கிள் சிலிண்டர் கொண்ட, 398சிசி இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ட்ரையம்ப். மிகவும் ஸ்மூத்தான, ஃப்ளெக்ஸிபிளான இன்ஜினாக இருக்கிறது இந்த ஸ்பீடு 400-ன் இன்ஜின். 3வது கியரில் 20கிமீ வேகத்தில் ஸ்மூத்தாக பயணிக்கக்கூடிய அதே நேரத்தில், டாப் கியரில் 120கிமீ வேகத்திலும் அதே ஸ்மூதனஸைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்பீடு 400-ன் இன்ஜின். மேலும், வாய்ப்பிருந்தால் 170கிமீ வேகத்தையும் இந்த ஸ்பீடு 400-க் கொண்டு எட்டிப் பார்க்க முடிகிறது.
ட்ரையம்ப் ஸ்பீடு 400: பிற வசதிகள்
இந்த ஸ்பீடு 400-ல் கொடுத்திருக்கக்கூடிய டிஜி-அனலாக் டயலானது ஒரு கிளாஸிக்கான லுக்கைக் கொடுப்பதோடு, நமக்குத் தேவையான தகவல்களையும் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரைடு பை வயர் மற்றும் டார்க் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய அம்சங்கள் நம் பயணத்தை மேலும் ஸ்மூத்தாக்குகின்றன. பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருக்கும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி டாப் நாட்ச். முழுவதுமாக எல்இடி விளக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்த ஸ்பீடு 400, இரவில் நல்ல விசிபிலிட்டியைக் கொடுப்பதோடு, இரவில் அழகாகன தோற்றத்தையும் கொடுக்கிறது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அட்ஜஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான லிவர் உள்ளிட்ட சில வசதிகள் மட்டும் இல்லை. ஆனால், இதன் விலைக்கு சில வசதிகள் இல்லாதது ஏற்றுக் கொள்ளக்கூடியது தான்.
இறுதியாக...
ட்ரையம்ப்பின் பிற ப்ரீமியம் பைக்கை பயன்படுத்தி விட்டு, அதே பெர்ஃபாமன்ஸையும் உணர்வையும் இந்த பைக் கொடுக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த விலைக்கு கூடுதல் நியாயம் செய்திருக்கிறது ட்ரையம்ப். தங்களுடைய ஆஸ்தான ஸ்டைலிங்கை, ப்ரீமியம்னஸ்ஸை, பட்ஜெட் விலையில் கொடுக்க முயன்ற ட்ரையம்ப்புக்கு முதலில் ஒரு வாழ்த்துக்கள். எண்ட்ரி-லெவல் ப்ரீமியம் செக்மண்டில் நிச்சயமாக சிறந்த போட்டியாளர் இந்த ஸ்பீடு 400. ராயல் என்ஃபீல்டு மட்டுமே அதிகம் கோலோச்சி வந்த இந்த செக்மண்டானது ஒகு தரமான போட்டியாளரைப் பெற்றிருக்கிறது. குறைந்த விலையில் ஒரு ப்ரீமியம் பைக் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருப்பவர்கள், கண்டிப்பாக இந்த பைக்கை நம்பி தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.