ரூ.2.63 லட்சம் விலையில் வெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X
இந்தியாவில் புதிய ஸ்கிராம்ப்ளர் 400X ப்ரீமியம் பைக் மாடலை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ரோட்ஸ்டர் பைக்கான ஸ்பீடு 400 மாடலை இந்தியாவில் வெளியிட்ட நிலையில், தற்போது இந்த ஸ்கிராம்ப்ளர் 400X மாடலை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். 19 இன்ச் முன்பக்க வீல்களுடன் 185 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது ஸ்கிராம்ப்ளர் 400X. இது ஸ்பீடு 400ஐ விட 9 கிலோ எடை அதிகம். ஸ்பீடு 400ஐ விட சற்று உயரமான சஸ்பென்ஷன் செட்டப்பைக் கொண்டிருப்பதால், சீட்டின் உயரமும் 835 மிமீ ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல் 195 மிமீ என்ற சிறப்பான கிரௌண்டு கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்கிராம்ப்ளர் 400X.
ட்ரையம்ப் ஸ்கிரம்ப்ளர் 400X: இன்ஜின் மற்றும் விலை
இந்தப் புதிய ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில், ஸ்பீடு 400ல் பயன்படுத்தப்பட்ட அதே 398சிசி லிக்விட் கூல்டு இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச்சுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கும் மேற்கூறிய இன்ஜினானது, 40hp பவரையும் 37.5Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் ஸ்கிராம்ப்ளர்களில் யெஸ்டி ஸ்கிராம்பளருக்கு அடுத்த படியாக லிக்விட் கூல்டு இன்ஜினைப் பெற்றிருப்பது இந்த ஸ்கிராம்ப்ளர் 400X மட்டுமே. இந்தியாவில் ஸ்பீடு 400 மாடலை விட ரூ.30,000 அதிகமாக, ரூ.2.63 லட்சம் விலையில் வெளியாகியிருக்கிறது புதிய ட்ரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X.