இந்தியாவில் இந்த ஆண்டு ரூ.5 லட்சம் விலைக்குள் வெளியாகவிருக்கும் புதிய பைக் மாடல்கள்
இந்தாண்டு (2024), இந்தியாவில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு இடையிலான பல்வேறு புதிய ப்ரீமியம் பைக்குகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிடவிருக்கின்றன. அப்படி எந்தெந்த நிறுவனங்கள் இந்த தொடக்கநிலை ப்ரீமியம் பிரிவில் புதிய பைக்குகளை வெளியிடுகின்றன? பார்க்கலாம். இந்தியாவில் தொடக்கநிலை ப்ரீமியம் பிரிவில் முன்னணியில் திகழ்ந்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்தாண்டு ஷாட்கன் 650 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 650 ஆகிய இரண்டு ப்ரீமியம் பைக்குகளை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. சூப்பர் மீட்டியார் 650ஐ அடிப்படையாகக் கொண்டு பாபர் ஸ்டைலில் ஷாட்கன் 650-யையும், ஸ்கிராம்ப்ளர் ஸ்டைலில் இன்டர்செப்டார் பியர் 650 மாடலையும் ரூ.3.5 லட்சம் விலைக்குள் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு.
புதிய தொடக்கநிலை ப்ரீமியம் பைக் மாடல்கள்:
இந்தியாவில் ஹஸ்க்வர்னா மற்றும் கேடிஎம் ஆகிய இரு நிறுவனங்களும் மூன்று புதிய தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகளை இந்தாண்டு வெளியிடவிருக்கின்றன. ஹஸ்க்வர்னா நிறுவனமானது, புதிய ஸ்வர்ட்பிலன் 401 என்ற புதிய பைக் மாடலை ரூ.3.3 லட்சம் விலைக்குள், இந்தாண்டு இடைப்பகுதியில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் நிறுவனமானது, உலகளவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 390 அட்வென்சர் மற்றும் RC 390 ஆகிய பைக் மாடல்களின் அடுத்த தலைமுறை வெர்ஷன்களை 2024 EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருந்தது. அந்த இரண்டு பைக்குகளையும் இந்தாண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.