2024 ஜனவரிக்குள் இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் 'டெஸ்லா'?
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் நுழைய கடந்த சில ஆண்டுகளாவே முயற்சி செய்து வருகிறது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். பல்வேறு தடைகளைக் கடந்து இந்தியாவில் டெஸ்லா நுழையவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது. இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதத்திற்குள்ளேயே அந்நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் கால்பதிக்க தேவையான அரசு அனுமதிகளுக்காக டெஸ்லா காத்திருக்கும் நிலையில், விரைந்து வரும் ஜனவரிக்குள் அந்த அனுமதிகளை மத்திய அமைச்சகங்கள் வழங்கவிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் புதிய பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவ முன்மொழிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு:
நேற்று (நவம்பர் 6), பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது தான் எலான் மஸ்குடைய டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய வர்ததக மற்றும் தொழிற்துறை, கனரக தொழிற்துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் இந்தியாவில் அமையவிருக்கும் டெஸ்லா தொழிற்சாலை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விநியோக சங்கிலியை கட்டமைக்க எலான் மஸ்க் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.