LOADING...
வரலாற்றுச் சாதனைக்கு மரியாதை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு டாடா சியரா எஸ்யூவி 2025 மாடல் பரிசளிப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு டாடா சியரா எஸ்யூவியின் முதல் யூனிட்கள் பரிசளிப்பு

வரலாற்றுச் சாதனைக்கு மரியாதை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு டாடா சியரா எஸ்யூவி 2025 மாடல் பரிசளிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2025
11:42 am

செய்தி முன்னோட்டம்

ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைப் படைத்து வெற்றியீட்டியதைக் கொண்டாடும் விதமாக, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, அதன் வரவிருக்கும் டாடா சியரா எஸ்யூவி (Tata Sierra SUV) காரின் முதல் யூனிட்களை அணிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஐகானிக் கார் இந்தியாவில் நவம்பர் 25இல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பழைய சியரா கார் மூன்று கதவுகளுடன் இருந்த நிலையில், இந்த நவீன பதிப்பு குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஐந்து கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய முன்னோட்டங்கள், பனோரமிக் சன்ரூஃப், இணைக்கப்பட்ட LED டெயில் லைட்டுகள் மற்றும் நவீன டோர்க் கார் போன்ற பிரகாசமான சிவப்பு நிறப் பூச்சு ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகின்றன.

முக்கிய அம்சங்கள்

மாடலின் முக்கிய அம்சங்கள் 

சமீபத்திய டீசர் காணொளியில், காரின் உட்புறத்தில் மூன்று திரைகள் கொண்ட டாஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், இன்ஃபோடெயின்மென்ட்டிற்கான மத்திய தொடுதிரை மற்றும் முன்பக்கப் பயணிக்கான ஒரு கூடுதல் திரை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் வாகனத்தில் இந்த அமைப்பு அறிமுகமாவது இதுவே முதல் முறையாகும். சக்திவாய்ந்த என்ஜின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், சியரா எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், டாடாவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன், ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் இருந்து பெறப்பட்ட 2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜினும் இடம்பெற வாய்ப்புள்ளது.