ஒரு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து, புதிய சாதனை படைத்துள்ளது. சமீபத்திய 50,000 யூனிட்கள் வெறும் ஒன்பது மாதங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, டாடா மோட்டார்ஸ் தனது முதல் 10,000 வாகனங்களை உற்பத்தி செய்ய 44 மாதங்களை எடுத்துக் கொண்டது. அடுத்த 40,000 எலக்ட்ரிக் கார்களை 15 மாதங்களில் விற்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 50,000 யூனிட்கள் ஒன்பது மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் ஹேட்ச்பேக் (Tiago EV), செடான் (Tigor EV) மற்றும் எஸ்யுவி (Nexon EV) ஆகிய மூன்று பிரிவுகளில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த எலக்ட்ரிக் கார்கள் மானியங்கள் தவிர்த்து ரூ.8.69 லட்சம் முதல் ரூ.19.29 லட்சத்திற்கு விற்க்கப்பட்டு வருகிறது.
2025க்குள் 10 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டம்
டாடா மோட்டார்ஸ் 2019 இல் Tigor EVயுடன் எலக்ட்ரிக் கார் சந்தையில் நுழைந்தாலும், 2020 இல் வெளியிட்ட Nexon EV தான் எலெக்ட்ரிக் கார் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது Tiago EV ஒரு பிரபலமான மாடலாக உருவெடுத்துள்ளது. மேலும், இந்திய எலக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 85% பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசின் மானியங்கள் தங்கள் எலக்ட்ரிக் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டாடா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாடிக்கைகையாளர்களை கவரும் வகையில் 2025 க்குள் 10 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.