இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்
விமானப் பயணிகள் நீண்ட வரிசையில் மடிக்கணினிகள், மற்றும் மின்னணு சாதனங்களை ஸ்கிரீனிங் செய்வதற்காக நிற்பதை தவிர்க்க, இந்தியா விமான நிலையங்களில், புதிய ஸ்கேனர்கள் பொறுத்தப்பட உள்ளது. இதனால், பிரயாணிகள் மின்னணு சாதனைகளை தனியே எடுத்து வைக்க வேண்டாம். விமானப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளரான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டியின் பணியகம் (பிசிஏஎஸ்), அடுத்த மாதத்திற்குள், புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், மின்னணு சாதனங்களை அகற்றாமல், பேக்கேஜ் ஸ்கிரீனிங் செய்வதை பற்றி விளக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல விமான நிலையங்களில் ஏற்கனவே இந்த புதிய பேக்கேஜ் ஸ்கேனர்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில், பயணிகள் தங்கள் மின்னணு சாதனங்கள் அல்லது ஜாக்கெட்டுகளை தனியாக எடுத்துச் செல்லத் தேவையில்லை.
இந்திய ஏர்போர்ட்களில் வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்
முதற்கட்டமாக, இந்த புதிய சோதனை இயந்திரங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகர விமான நிலையங்களில் நிறுவப்பட்டு, அடுத்த வருடத்திற்குள் மற்ற விமான நிலையங்களைக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிக்கை கூறுகிறது. மற்ற நாடுகளைப் போலவே, கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், இந்தியாவிலும் விமானப் பயணம் அதிகரித்துள்ளது. இதனால், விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்ற வாரம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களில், செக்-இன் மற்றும் பாதுகாப்பு சோதனைக்காக பயணிகள் மணிக்கணக்கில் வரிசையில் நின்றனர். இது பல விமான தாமதங்களுக்கும் வழிவகுத்தது. இந்த புது நடவடிக்கை, அதன் பிறகே வேகமெடுத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.