
'மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை'களைக் கட்டமைக்கும் ஸ்வீடன்.. அப்படி என்றால் என்ன?
செய்தி முன்னோட்டம்
தங்கள் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பை மேம்படுத்த உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையைக் கட்டமைக்கவிருக்கிறது ஸ்வீடன் அரசு. மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை என்றால் என்ன?
எலெக்ட்ரிக் வாகனங்களே ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் என்றான பின்பு, அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம்.
எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டில் முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப்படுவது சார்ஜிங் தான். சார்ஜிங் செய்வதற்கு நிறைய நிலையங்கள் இருந்தாலும், வாகனம் சார்ஜ் ஆவதற்கு குறிப்பிட்ட நேரம் செலவாகிறது.
நீண்ட தூரப் பயணங்களில் பயண நேரத்தையும் இவை வெகுவாக அதிகரிக்கும். எனவே, சார்ஜிங் செய்யும் நேரத்தைக் குறைக்க மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த கடந்த பல ஆண்டுகளாகவே அந்நாடு சோதனை செய்து வருகிறது.
ஸ்வீடன்
மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள்:
இந்த மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் இயக்கத்தில் இருக்கும் போதே, வாகனங்கள் சார்ஜ் ஆகும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
ஏற்கனவே, வயர்களுடன் கூடிய இரண்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு இரண்டு மின்மயமாக்கப்பட்ட சாலைகளைக் கட்டமைத்திருக்கிறது அந்நாடு.
தற்போது மூன்றாவது வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் புதிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கவிருக்கிறது ஸ்வீடன்.
2025-ம் ஆண்டு இந்த மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது அந்நாடு.
இந்த புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் பட்சத்தில், அடுத்த 2035-ம் ஆண்டுக்குள் 3,000 கிமீ நீளத்திற்கு மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளைக் கட்டமைக்கும் திட்டத்தில் இருக்கிறது ஸ்வீடன்.
மேலும், இந்தக் கட்டமைப்புகளுக்கான தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்காகவும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் கைகோர்த்திருக்கிறது ஸ்வீடன்.