விரைவில் கல்லினன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தவிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ்
தங்களுடைய சிறந்த சொகுசு கார் மாடல்களுள் ஒன்றான கல்லினன் (Cullinan) மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ரோல்ஸ் ராய்ஸ். இந்நிலையில், இந்த ஃபேஸ்லிப்ட் வெர்ஷனானது சோதனை ஓட்டத்தின் போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது. 2018ம் ஆண்டு கல்லினன் மாடலை ரோல்ஸ் ராய்ஸ் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறது இந்தக் கல்லினன். முகப்பு மற்றும் பின்பக்கம் சின்னச் சின்ன டிசைன் மாற்றங்களைக் பெற்றிருக்கிறது புதிய கல்லினன் ஃபேஸ்லிப்ட். முக்கியமாக முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்களில் புதிய டிசைன் மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஃபேஸ்லிப்ட்: புதிய மாற்றங்கள்
சின்னச் சின்ன டிசைன் மாற்றங்களைத் தவிர்த்து, மெக்கானிக்கலாக புதிய கல்லினன் ஃபேஸ்லிப்டில் எந்த வித மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது. கல்லினனில் இதுவரை ஒரே ஒரு இன்ஜின் தேர்வை மட்டுமே வழங்கி வந்திருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். 563hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 6.75-லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு V12 இன்ஜின் மட்டுமே அது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் கல்லினன் மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனிலும் எந்த வித டிசனை மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இன்ஜினுடன் கொஞ்சம் எலெக்ட்ரிகல் வசதிகளை ரோல்ஸ் ராய்ஸ் கொண்டு வர வாய்ப்புகள் குறைவு தான். எனினும், அதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.