8 ஆண்டுகள் வரை பேட்டரி வாரண்டி! 2026ல் நீங்கள் வாங்கக்கூடிய 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரியை மாற்றுவதற்கு ₹40,000 முதல் ₹90,000 வரை செலவாவதால், அதன் வாரண்டி விதிகளை அறிந்து வாங்குவது மிக அவசியமாகும். ஓலா, ஏத்தர் மற்றும் சிம்பிள் ஒன் ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பிரத்யேகமாக 8 ஆண்டுகள் வரை பேட்டரி வாரண்டியை வழங்குகின்றன. ஹீரோ விடா மற்றும் டிவிஎஸ் ஐகியூப் ஆகிய நிறுவனங்கள் கூடுதல் பாதுகாப்பிற்கு 5 ஆண்டுகள் வரை பேட்டரி வாரண்டியைத் தருகின்றன.
ஓலா மற்றும் ஏத்தர் வாரண்டி
ஓலா மற்றும் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கிடைக்கும் 8 ஆண்டுகால பேட்டரி வாரண்டியின் நிபந்தனைகள்
ஓலா எஸ்1 சீரிஸ்: இதில் நிலையான 3 வருட வாரண்டி இருந்தாலும், கூடுதலாகப் பணம் செலுத்தி 8 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இந்த வசதி S1 Pro, S1 Air, S1 X+ மற்றும் S1 X (3kWh, 4kWh) மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், கிலோமீட்டர் வரம்புத் தேர்வைப் பொறுத்து 80,000 கிமீ-1,25,000 கிமீ வரை வாரண்டி கிடைக்கும். ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ரிஸ்டா: ஏத்தர் நிறுவனம் 'Eight70' என்ற திட்டத்தின் மூலம் 8 ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ வரை பேட்டரி வாரண்டியைத் தருகிறது. இத்திட்டத்தில், பேட்டரியின் ஆயுள் 70 சதவீதத்திற்கும் கீழே குறைந்தால், இலவசமாகப் புதிய பேட்டரி மாற்றிக் கொடுக்கப்படும் என்ற வெளிப்படையான விதியும் உள்ளது.
சிம்பிள் ஒன் மற்றும் விடா அம்சங்கள்
சிம்பிள் ஒன் மற்றும் ஹீரோ விடா ஸ்கூட்டர்களின் வாரண்டி விபரங்கள் மற்றும் செகண்ட் ஹேண்ட் விற்பனை லாபம்
சிம்பிள் ஒன்: சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது ஸ்கூட்டருக்கு நேரடியாகவே 8 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை விலையுடன் இணைத்துக் கூடுதலாக வழங்குகிறது. எனினும், இதன் விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்படுவதால் வாங்குவதற்கு முன் டீலரிடம் உறுதிப்படுத்துவது நல்லது. ஹீரோ விடா வி1: இந்த ஸ்கூட்டருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி நிலையாக 5 ஆண்டுகள் அல்லது 60,000 கி.மீ பேட்டரி வாரண்டி கிடைக்கிறது. இதன் சிறப்பம்சமே, இந்த வாரண்டியை அடுத்த உரிமையாளருக்கும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், செகண்ட் ஹேண்ட் ரீசேல் மதிப்பின் போது நல்ல விலையைப் பெறலாம்.
டிவிஎஸ் மற்றும் வாங்குபவருக்கான வழிகாட்டி
டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டரின் 5 வருட வாரண்டி மற்றும் இவி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விதிகள்
டிவிஎஸ் ஐகியூப்: இதன் iQube S மற்றும் எலக்ட்ரிக் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் மாடல்களுக்கு எக்ஸ்டெண்டட் வாரண்டி மூலம் மொத்தம் 5 ஆண்டுகள் அல்லது 70,000 கிமீ வரை பேட்டரி வாரண்டி பெறலாம். டீலர்ஷிப்பிற்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டியவை: முதலாவதாக, வருடக் கணக்கை விடக் கிலோமீட்டர் வரம்பைக் கவனிக்க வேண்டும். தினசரி 30-40 கிமீ ஓட்டுபவர்கள் 5 வருடத்திற்குள்ளேயே கிலோமீட்டர் வரம்பை எட்டிவிடுவார்கள். இரண்டாவதாக, நீட்டிக்கப்பட்ட வாரண்டி இலவசமா அல்லது கூடுதல் கட்டணமா என்பதை அறிய வேண்டும். மூன்றாவதாக, பேட்டரியின் ஆயுள் எவ்வளவு குறைந்தால் இலவசமாக மாற்றுவார்கள் என்ற ஹெல்த் த்ரெஷோல்டு (Health Threshold) விபரத்தைக் கேட்டு உறுதி செய்ய வேண்டும்.