இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்
PLI போன்ற பல்வேறு திட்டங்களின் உதவியுடன், 2030-ம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோமொபைல் துறையானது உலகளவில் மூன்றாவது இடத்தை அடையும் என அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம். இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் PLI (Production Linked Incentive) திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இந்திய ஆட்டோமொபைல் துறையில், ரூ.25,938 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து வருகிறது மத்திய அரசு. 2021 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து அறிய இன்று கனரக தொழிற்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில் இன்று சந்திப்பு நடைபெறுகிறது.
ஆட்டோமொபைல் துறையில் PLI திட்டத்தின் செயல்பாடு:
இன்றைய சந்திப்பில் PLI திட்டத்தின் கீழ், வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறவிருக்கின்றன. தற்போது வரை இத்திட்டம் எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை அளவிடுவதைக் கடந்து, இத்திட்டத்தின் கீழ் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதனை தெளிவுபடுத்துவதையும் இன்றைய சந்திப்பில் முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம். மேலும், இத்திட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் மற்றும் சவால்கள் இருக்கின்றன என்பதனையும், அவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இன்றைய சந்திப்பில் உரையாடவிருக்கின்றனர். 2028ம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோமொபைல் துறையின் மதிப்பை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. அதற்கு PLI போன்ற பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம்.