ரூ.1.37 லட்சம் விலையில் புதிய 'மோட்டோஃபாஸ்ட்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஒகாயா நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மோட்டோஃபாஸ்ட் (Motofaast) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டிருக்கிறது ஒகாயா (Okaya) நிறுவனம். ஸ்கூட்டர் மற்றும் பைக் இரண்டும் கலந்த கலவை என தங்களது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து தெரிவித்திருக்கிறது ஒகாயா.
ரூ.2,500 செலுத்தி இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரியைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது ஒகாயா.
7.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், 2GHz ப்ராசஸர் மற்றும் 3GB ரேம், GPS நேவிகேஷன் ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது புதிய மோட்டோஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஒகாயா மோட்டோஃபாஸ்ட்: எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி மற்றும் விலை
இந்தப் புதிய ஸ்கூட்டரில் 3.08hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.3kW எலெக்ட்ரிக் மோட்டாரை அளித்திருக்கிறது ஒகாயா. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று மோடுகளைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது அதிகபட்சமாக 70 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது.
மொத்தமாக 3.53kWh அளவுடைய இரண்டு பேட்டரிக்களுடன், 130 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இந்த பேட்டரிக்களை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 வருடம் அல்லது 30,000 கிமீ வாரண்டியை அளித்திருக்கும் ஒகாயா நிறுவனம், இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.37 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது.